Total Pageviews

Thursday, January 08, 2009

இடைவேளை

மீண்டும் நான் பதிவு செய்ய வந்திருக்கிறேன்.என் கடைசி வலைப்பதிவு 2007 செப்டம்பரில், ஏன் இவ்வளவு இடைவெளி? பதில் ரொம்ப சுலபம். செப்டம்பர் அடுத்து அக்டோபரில் தான் "என்ன என்ன்...தேடி வந்த அஞ்சலயை".. "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்". அக்டோபரில் ஆரம்பித்த உறவு நவம்பர் 15ல் நிச்சயமாகி உறுதியாச்சு..பிறகு அடுத்த ஆறுமாதம் இமெயில், SMS,web chat, voice chat, twitter, orkut, அவரைக்காய்..என்ன இன்னபிற இத்தியாதிகளால் இரவு பகல் பாராமல், இரவு எது பகல் எது என்று தெரியாமல் கழிந்தது. "மே மாதம் 2008ல்" மேஜர் ஆனேனோ இல்லையோ, பேஜாராய் மாப்பிள்ளையானேன். கல்யாணம் ஆகி பிறகு இல்லறம் வளர்க்க, நல்ல நேரமெல்லாம் செலவாயிற்று..."அப்புறம் எப்படி இப்ப blog எழுத வந்திருக்கே"ன்னு நீங்க கேட்டா..."வாழ்க்கை ஒரு வட்டம்"ம்னு தான் என்னால சொல்ல முடியும்..ஹிஹி..

Anyway, இந்த இடைப்பட்ட காலத்தில் மேற்சொன்ன விஷயங்களை தவிர, பல விஷயங்களும் நடந்தது...என் வேலையைவிட்டு..மீண்டும் இருந்த இடத்துக்கே வந்துவிட்டேன்...குளிர் கொளுத்துற (அட நல்லாயிருக்கே..)..wisconsin வந்தாச்சு.., அமேரிக்க தேர்தல் முடிஞ்சாச்சு, பொருளாதாரம் பொருள் அற்ற ஆதாரமாச்சு...நிறைய நடந்தாச்சு. சரி, இனிமே கொஞ்சம் வலைப்போம்னு..முடிவுக்கு வந்துட்டேன்...ஏன்னா என் கற்பனைக் குதிர லொள்ளு தாங்க முடியல.."எப்படா என்ன வெளிய விடுவே"ன்னு மிரட்ட ஆரம்பிச்சிடுச்சு..சரி என்ன எழுதலாம்?...என்ன எழுதினாலும் கொஞ்சம் சுவாரஸ்யமா எழுதலாம்னு முடிவுக்கு வந்துட்டேன்..officialஆ என்னோட வலைப்பதிவு பெயர மாத்திட்டேன்..நம்ம taglineஏ வலைப்படிவு பெயரா வச்சிட்டேன்...பார்க்கலாம்

Thursday, September 06, 2007

சக் தே இந்தியா - தமிழில்

சமீபத்தில் நான் பார்த்து ரசித்த படம் சக் தே இந்தியா. தரமான படம். ஷாருக்கான் என்ற அற்புதமான நடிகன் எப்படி மற்ற படங்களில் வீணடிக்கப்படுகிறான் என்பதற்கு இந்த படம் நல்ல உதாரணம். இந்த படத்தை பற்றி இந்த பதிவில் நான் விமர்சிக்க போவதில்லை. இந்த படத்தை பற்றி என் நன்பர் செந்திலிடம் பேசும் போது, நாங்கள் இருவருமே இது போல ஒரு படம் ஏன் தமிழில் வருவதில்லை என்று விவாதித்தோம். அப்போது வேடிக்கையாக நம் தமிழ் நடிகர்கள் இந்த மாதிரி படத்தில் நடித்தால் கதை எப்படி இருக்கும் என்று யோசித்தோம். அதை தான் இப்போது இங்கே பகிர்ந்துகொள்ள போகிறேன்.

கேப்டன் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்: நம் கேப்டன் இந்த படத்தில் நடித்திருந்தால், 16 பெண்களுக்கும் ஹாக்கி மட்டை பதில், ஏகே 47 துப்பாக்கி பயிற்சி கொடுத்திருப்பார். பின்பு அனைவருடன் ஒரு டூயட் பாடி முடித்து, நம் நாட்டை பற்றி விலாவரியாக statistics சொல்லி முடித்து, எல்லாரையும் கூப்பிட்டு போய் காஷ்மீரில் baakistaan தீவரவாதிகிளுடன் சண்டை போடுவார். படத்தில் இவரோட பன்ச் லைன் "penalty தமில்ல எனக்கு பிடிக்காத வார்த்த.." படத்திற்கு அட்டகாசமாக "சுக்கு டா இந்தியா" என்று பெயர் வைத்திருப்பார். சன் டிவியில், கால் மேல் கால் போட்டுகொண்டு "சுக்கு டா இந்தியா...காரம் இல்லை" என்று விமர்சனம் செய்வார்கள்.

கமல்ஹாசன்: 16 பெண்களில், பத்து கெட்டப்பை அவரே போட்டிருப்பார். கோச்சாக 'நம்மவர்' தாடி வைத்துகொண்டு வந்திருப்பார். அவருடைய ·ப்ளாஷ்பேக்கை ஒருவர் பாகிஸ்தானிடம் அவர் பெட்டி வாங்கிக்கொண்டு இந்தியாவுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று வில்லன் ரேஞ்சுக்கு சொல்லுவார், ஆனால் அவரோ அதெ ·ப்ளாஷ்பேக் காட்சியை கேமிரா அங்கிளை மாற்றி வேறு மாதிரி சொல்லி அவர் நிரபராதி என்று நிரூபிப்பார்.

சூப்பர்ஸ்டார்: தலைவரை 16 பெண்களும் ஒருதலையாக காதலிப்பார்கள், தலைவரின் பெற்றோர்கள் அந்த பதினாறில் ஒன்றை செலக்ட் செய்ய சொல்லுவார்கள், ஆனால் தலைவரோ தனக்கு 'தமிழ் கலாச்சாரதோட ஒரு பெண் தான் வேண்டும்' என்று சொல்லி, ஹாக்கி ஸ்டேடியம் கூட்டிகொண்டிருக்கும் பெண்ணை டாவடிப்பார். வில்லன் ஹாக்கி மேட்சை fix செய்யும் ப்ரோக்கராக வருவார். அவர் தலைவரிடம் தோற்றுபோக சொல்ல, தலைவரோ மாட்டேன் என்று சொல்ல, வில்லன் வில்லத்தனம் செய்து தலைவரை பாகிஸ்தான் கையாள் என்று முத்திரை குற்றி விடுவான். தலைவர் பிறகு ஹாக்கி மேட்சில் புரளும் பெட்டிங் பணத்தை எல்லாம் வில்லன்களிடம் வெளியே கொண்டு வந்து, ஊருக்கு ஊர் ஹாக்கி ஸ்டேடியம் கட்டுவார். படத்தின் பெயர் "சிவாஜி the coach". படத்தில் இவரோட பன்ச் லைன் "goalஅ போட்டாலே ச்சும்மா அதிருதுல்ல..."

விக்ரம்: 'நான் கோச் இல்ல...பொறுக்கி' இது தான் படத்தில் இவரோட பஞ்ச் லைன். ரேய்மண்ட் க்ளாஸ் போட்டுக்கொண்டு முறுக்காக 16 பெண்களுக்கும் கோச் கொடுப்பார். அதில் ஒரு மாமி ·பிகரை மட்டும் காதலிப்பார். இங்கேயும் வில்லன் மேட்ச் ·பிக்ஸிங் பார்ட்டி. வில்லன் லஞ்சம் கொடுக்க, அதை வாங்கிக்கொள்வார், க்ளைமாக்சில் தான் அந்த பணத்தையெல்லாம் பிரதமர் ஹாக்கி நிதிக்கு அவர் கொடுத்தது தெரியும்.

சிம்பு: தம்பி சிம்புவை ஹாக்கி ஆடும் பெண் ஒருத்தி ஏமாற்றிவிட, அதற்கு பழிவாங்க அண்ணன் சிம்பு கோச்சாக பொய் சொல்லிக்கொண்டு 16 பெண்களையும் ஏமாற்றுவார். அடிக்கடி "யார் முதல்ல கோல் போடுறாங்கன்னு முக்கியம் இல்ல..கடைசில் யார் நிறைய கோல் போடுறாங்கன்னு தான் முக்கியம்.." என்று விரலை மடக்கி மடக்கி சொல்லுவார்.

Friday, August 10, 2007

நான் கடவுள் - வி.சி கதை



நகரம் விழாக்கோலம் பூசியிருந்தது. பேராசிரியர் ஆத்மா பிறந்த மண்ணில் பிறந்ததற்கு நகரவாசிகள் பெருமிதம் கொண்டனர். எல்லா ஊடகங்ககளையும் ஆத்மாவின் கண்டுபிடிப்புகளும் அதனால் நிகழும் சங்கிலி நிகழ்வுகளும் பிரதான இடம் பிடித்திருந்தன. இதனால் உலகமே ஒரு மறுமலர்ச்சி அடைந்தது. போலி சாமியார்கள், கல்ட் கோஷ்டிகள், மடாதிபதிகள் பாதி பேர் தலைமறைவாகிவிட்டனர், மீதி பேர் மக்களால் துரத்திக் கொல்லப்பட்டனர், மிச்சமிருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சில காலம் முன் நாத்திகம் பேசிய நாட்டில் கட்டப்பட்ட கோயில்கள் அனைத்தும் இடிக்கப்பட்டன. மற்ற நாடுகளில் இருந்த மத ஸ்தாபனங்கள் எல்லாம் வரலாற்று சின்னங்கள் என்பதால் அரசாங்ககளால் பாதுகாக்கப்பட்டன. அப்படி என்ன ஆத்மா கண்டுபிடித்துவிட்டார், 'கடவுள் இல்லை' என்பதை தான். அவரின் தொடர் ஆரிஜின் டியரிகள், இதுவரை கடவுள் பேயரால் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டன. உலகம் இவரின் கருத்துக்களை ஒத்துக்கொண்டன.

நகரின் மையத்தில் இருக்கும் பிரும்மாண்ட மைதானம். மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள். எங்கு திரும்பினாலும் ஆத்மா மேலே பார்த்த மாதிரி தெரியும் படங்கள். உலகத்தின் முக்கிய தலைவர்கள் எல்லாம் இன்று ஒரே மேடையில் அத்மாவை கௌரவிக்க இருந்தனர். எல்லோரும் ஆத்மாவை புகழ்ந்து தள்ளினார்கள். "ஆத்மா தான் உலகத்தின் பார்த்த ஈடு இனையற்ற விஞ்ஞானி", "உலகத்தின் சாபக்கேட்டை போக்க வந்த மேதை", "மதங்களால் இனி நிகழவிருந்த பல போர்களையும், அழிவுகளையும் தடுத்த..." தலைவர்கள் அடுக்கிக் கொண்டே போனார்கள். எல்லாவற்றையும் சலனமற்ற ஒரு புன்னைகையுடன் கேட்டு கொண்டிருந்தார் ஆத்மா. முடிவாக பேச வந்தவர் தலைவர் ஒருவர் "மனித குலத்தையே காக்க வந்த இன்னொரு அவதாரம் தான் ஆத்மா, இனிமேல் நமக்கெல்லாம் அவர்தான் கடவுள்" என்றார். இதை கேட்டு மட்டும் அத்மாவின் முகத்தில் கவலை படர்ந்தன. முடிவாக பேச வந்த ஆத்மா "என்னை கடவுள் என்று கூறுவது அபத்தமான ஒன்று...என் வாழ்க்கையேல்லாம் அப்படி ஒன்று இல்லை என்பதை நிரூபிக்கவே அர்பனித்திருக்கிறேன்...எனவே இனி தயவு செய்து யாரும் அப்படி பேசாதீர்கள்.." வேண்டுகோள் வைத்தார்.

********

அது ஒரு மலை உச்சி, மேலே அத்மா நகரத்தை பார்த்துக்கொண்டிருந்தார். இரவு நகரத்தை போர்த்திக்கொண்டிருந்தது. கடந்த ஒரு மாதமாய் உலகம் கண்டிராத அமைதி. "எல்லாம் சுபம், சொல்ல செய்திகள் இல்லை" என்று பத்திரிகைகள் பல பக்கங்ளை குறைத்தன. இதெற்கெல்லாம் காரணமாய், உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் அத்மாவோ எதுவுமே தெரியாதது போல் நகரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு ஒளி வட்டம் அத்மா இருந்த இடத்தை சூழ்ந்தது, உச்சிவெயிலில் தெரியும் சூரிய ஒளி அந்த இரவில் ஆத்மா இருந்த இடத்தினில் மட்டும். ஆத்மா அந்நாந்து மேலே பார்த்தார், அவர் கண்ணில் பயமில்லை.
"நன்றி ஆத்மா, நான் சொன்ன பணியை பிழையின்றி முடித்துவிட்டாய்"
"பிதாவே என்ன இது..நீங்கள் சொன்னதையெல்லாம் தானே நான் செய்தேன்..பரம்பொருள் நீ எனக்கு நன்றி சொல்வதா...தந்தையே இனி நீங்கள் எப்போது எங்களுடன் வருவீர்கள்"
"இனி உங்கள் உலகத்திற்கு நான் தேவையில்லை...எந்த தந்தையும் தன் பிள்ளை தன் பெயரால் அடித்து கொண்டு சாவதை விரும்பமாட்டான். நான் தானே உங்களுக்கு பிரச்சனை..அதனால் தான் என்னையே அழித்துக் கொண்டேன். இனியாவது நான் உங்களுக்கு விட்டு செல்லும் மனிதம் என்னும் கடவுளை கான முயற்சி செய்யுங்கள்..வருகிறேன்" ஒளி மறைந்தது.

Sunday, August 05, 2007

இது ரீமேக் சீசன்

சமீபத்தில் வெளியான 'நான் அவன் இல்லை' படம் தான் எனக்கு தெரிந்து தமிழில் வந்த, முதல் தமிழ் ரீமேக் படம். அதாவது இது ரீமேக் படம் தான் என்று சொல்லி எடுத்த முதல் படம். உன்மையில் கரகாட்டகாரன் தான் இந்த முயற்சியில் வந்த முதல் படம். தில்லானா மோகனாம்பாளை கரகாட்டகாரனாக எடுத்ததை கங்கை அமரன் மறுக்கவில்லை.
நான் அவன் இல்லை படத்தை தொடர்ந்து இப்போது பில்லா, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை ரீமேக் செய்து வருவதாக தெரிகிறது. சரி, என்ன மாதிரியான படங்களை ரீமேக் செய்யலாம்? அதற்கு என்ன அளவுகோல்? என்னைக் கேட்டால் எந்த படம் எப்போது பார்த்தாலும் அலுக்காமல் நம்மை entertain செய்கிறதோ அந்த படத்தை தாராளமாய் காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி திரைக்கதை அமைத்து ரீமேக் செய்யலாம். ஆங்கிலத்தில் வந்த bourne identity, manchurian candidate, perfect murder, king kong, casino royale, ocean's twelve, all kings men என்று எனக்கு தெரிந்த பல படங்கள் ரீமேக் படங்களே. நான் இதுபோல தமிழ் படங்களில் ரீமேக் செய்வதற்கு ஒரு பட்டியல் யோசித்தபோது தோன்றிய படங்கள் இவை:

பாமா விஜயம் - அறுபதுகளில் வந்த பாலச்சந்தரின் கலக்கலான நகைச்சுவை படம். எப்போது பார்த்தாலும் எனக்கு அலுக்காத படம் இது. இப்போது இந்த படத்தை எடுத்தால் நாகேஷ் பாத்திரத்தில் விவேக் நடித்தால் நன்றாய் இருக்கும்.

எதிர்நீச்சல் - கருப்பு வெள்ளை கால தமிழ் சினிமாவில் பாலச்சந்தரின் தைரியமான முயற்சி இது. ஒரு காமெடியனை வைத்து முழு படத்தையும் பல அடுக்கு குடியிருப்பில் நகர்த்தியிருப்பார். இந்த படத்தை இப்போது ரீமேக்கினால், casting தான் சவாலான விஷயம்.

நூற்றுக்கு நூறு - இதுவும் பாலச்சந்தரின் படம் தான். உன்மையிலே மற்றுமொரு வித்தியாசமான முயற்சி. ஒரு கல்லூரி பேராசிரியர் மீது மாணவி தன்னை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக அபாண்டமாய் புகார் சொல்கிறாள், அதை எப்படி பேராசிரியர் சமாளித்து, தான் நிரபராதி என்று நிரூபிக்கிறார் என்பதே கதை. அகிரா குரோசாவாவின் ரோஷோமான், ஏவிஎம்மின் அந்த நாள் படங்களை போல பல flashback sequences மூலம் திரைக்கதை அமைத்திருப்பார். இந்த கதையை கமலை வைத்து இப்போது எடுத்தால் நன்றாய் இருக்கும்.

தில்லுமுல்லு - நம் சூப்பர்ஸ்டாரின் கேரியரில் மறக்கமுடியாத சினிமா. ஹிந்தியில் வந்த கோல்மால் படத்தின் ரீமேக் என்றாலும், தமிழில் நல்ல காமெடியாய் திரைக்கதை அமைத்திருப்பார் பாலச்சந்தர். ரஜினியும் தேங்காய் ஸ்ரீனிவாசனும் சேர்ந்த hillarious கூட்டனி படத்திற்கு மிகப்பெரிய பலம். இப்போது விஜய், பிரகாஷ்ராஜ் வைத்து ரீமேக்கலாம்.

இன்று போய் நாளை வா - கதை, லாஜிக் இதையெல்லாம் மறந்து முழுக்க முழுக்க காமெடிக்காக எடுக்கப்பட்ட படம். மூன்று இளைஞர்கள் ஒரு பெண்ணை ப்ராக்கெட் போட அடிக்கும் லூட்டிகள் தான் கதை. பாக்யராஜின் master piece படம், திரைக்கதையிலும் வசனத்திலும் கலக்கியிருப்பார். அழகாக இதை இப்போது ரிமேக் செய்யலாம். பாக்யராஜின் பாத்திரத்திற்கு casting தேர்வு இந்த படத்தின் ரீமேக்கிற்கும் ஒரு சவால்.

ரங்கா - என்பதுகளின் ஆரம்பத்தில் வந்த, ரஜினி கராத்தே மணி நடித்த படம். மணி திருடனாய் தவறான வழியில் போகும் ஒரு ஆளாய் இருப்பார், ரஜினியோ தன் பெட்டியில் கீதை, திருக்குறள் வைத்து நல்ல பையனாய் இருப்பார். இருவரும் சந்திக்கின்றனர், இருவரும் அவரவர் கொள்கைகளை நியாயப்படுத்தி வாதாடுகின்றனர், படுத்து தூங்கும்போது இருவரும் மற்றவர் சொன்னதை யோசிக்கிறார்கள், விடிந்ததும் நல்லவரான ரஜினி திருடனாய் மாறுகிறார் கராத்தே மணிக்கு நன்றி சொல்லி ஒரு கடுதாசி வைத்து அவர் வீட்டிலேயே திருட்டை ஆரம்பிக்கிறார், கெட்டவரான மணி நல்லவராய் மாறுகிறார். இந்த ஒப்பனிங்கே போதும் ஒரு நல்ல திரைக்கதை அமைத்து ரிமேக் செய்ய.

Saturday, August 04, 2007

சொன்னதெல்லாம் இனிமை

ஆனந்த விகடனில் நடிகர் பிரகாஷ்ராஜின் 'சொல்லாததும் உன்மை' தொடர் இந்த வாரத்தோடு முடிவடைந்தது. பொதுவாக ஒரு நடிகரை அழைத்து பத்திரிகையில் எழுத சொன்னால், முக்கால்வாசி தங்கள் சுயபுராணம், சினிமா சாதனைகள் என்று எழுதி நம்மை கொல்வார்கள். ஆனால் பிரகாஷ்ராஜ், இதெல்லாம் இல்லாமல், மிகவும் எளிமையாக தன்னுடைய மனசாட்சியை வாசகர்களுடன் இந்த தொடர் முழுவதும் பகிர்ந்திருக்கிறார். உன்மையை சொன்னால், நான் இந்த தொடரின் எல்லா அத்தியாத்தையும் படித்ததில்லை. ஆனால் படித்த சில அத்தியாயத்தில் எல்லாம், சொல்ல வந்த விஷயத்தின் மூலம் என்னை பலமுறை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். வாழ்க்கையை பற்றி இவரின் outlook எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 'ஒரு கனவன் மனைவி ஒருத்தருக்காக இன்னொருத்தர் தன் தேவைகளை, ஆசைகளை, ரசனைகளை விட்டுகொடுத்து வாழ்வது அவசியமா? எவ்வளவு நாள் அப்படி வாழ முடியும்? அப்படி இல்லாமல் ஒரே கூரையில் ஒவ்வொரும் சுதந்திரமாக நன்பர்களாய் ஏன் வாழக்கூடாது?' என்று கடைசி பகுதியில் இவர் கேட்கும் கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைக்கிறது.

Sunday, July 29, 2007

நான் படித்த காந்தி

சமீபத்தில் தான் மகாத்மா காந்தியின் சுயசரிதையான 'Stories of my experiments with truth' முழுவதும் படித்து முடித்தேன். தமிழில் சத்திய சோதனையாக வெளிவந்தது. என் நன்பர்கள் சிலர் அதை படித்து முடித்ததும் ஒரு சிலிர்ப்பு வந்ததாகவும், சில நாட்கள் உன்மையே பேசியதாகவும் சொல்வார்கள். எனக்கு அப்படி எல்லாம் ஒன்றும் தோன்றவில்லை. இந்த புத்தகம் அவர் பிறந்ததிலிருந்து 1920 வரை நடந்த நிகழ்ச்சிகளை பதிவு செய்திருக்கிறது. அதிலும் முக்கால்வாசி அவரின் தென் ஆப்பிரிக்கா வாழ்க்கையே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு விஷயம் இந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, அவரின் சத்திய சோதனையின் ஒவ்வொரு வெற்றியையும் தோல்வியையும் ஒளிவு மறைவு இல்லாமல் பதிவு செய்ததேயாகும். சிறுவயதில் மற்ற எல்லோரையும் போலவே வாழ்க்கையின் பலம் பலவீனத்தோடு தான் காந்தியும் இருந்திருக்கிறார். வீட்டிற்கு தெரியாமல் நிறைய நாட்கள் மாமிசம் சாப்பிட்டிருக்கிறார், தண்ணி அடித்திருக்கிறார், ஒருமுறை விபச்சாரி வீட்டிற்கும் சென்றிருக்கிறார், ஆனால் அங்கு ஒன்றும் செய்யாமல் விபச்சாரியிடம் திட்டு வாங்கி வந்ததாக சொல்கிறார். தன் தந்தை சாக கிடக்கிற நேரத்திலும் தன் மனைவியை வலுக்கட்டாயமாக காமத்திற்கு உட்படுத்தியிருக்கிறார். அது பற்றி மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.

அவர் இங்கிலாந்து சென்று படித்தபோது, தென் ஆப்பிரிக்காவில் நேர்ந்த மாதிரி discrimination ஒன்றும் நடக்காதது ஆச்சர்யமாக இருக்கிறது. காந்தி இந்த சுயசரிதை எழுதும் வரை, ஆங்கிலேயர் ஆட்சி போக வேண்டும் என்ற கருத்து கொண்டவராக இருக்கவில்லை. ஆங்கிலேயர்களால் தான் இந்தியாவை ஆள முடியும் என்று நம்பியிருந்தார். அங்கிலேயர் ஆட்சியில் நடந்த கொடுமைகளை மட்டும் தான் சாத்வீக முறையில் எதிர்த்தார். அவரின் சாத்வீக முறையால் தான் அவரை மரியாதையாக நடத்தியது ஆங்கிலேய அரசு, அவர் கேட்டதற்கும் செவி சாய்த்தது. 1920 பிறகு தான் அவர் கொள்கையில் மாற்றம் தெரிந்தது, அதற்குள் அவர் பெரும் தலைவர் ஆகிவிட்டதால் இங்கிலாந்து அரசு அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை.

நான் பள்ளியில் படித்த் பாடத்தில், லோகமான்ய திலகர் தான் காந்தியின் குருவாக இருந்தார் என்று சித்தரிக்க பட்டிருந்தது. ஆனால் உன்மையில் கோகலே தான் காந்தியின் குருவாக விளங்கினார். கோகலே பற்றி பல பக்கங்களில், அவர் எப்படி காந்தியின் தேசப்பற்று கொள்கைகளை உரமேற்றினார் என்று எழுதியிருக்கிறார். திலகர் பற்றி ஒன்று இரண்டு பக்கம் தான் எழுதியிருக்கிறார், அதிலும் அவரை விமர்சித்து எழுதியிருக்கிறார். படேல் பற்றி குறிப்பு இருக்கிறது, நேரு பற்றி ஒரு வரி கூட அவர் எழுதவில்லை. ஆனால் மோதிலால் நேரு பற்றி நிறைய எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து ராஜாஜி பற்றி எழுதியிருக்கிறார்.

பாரிஸ்டர் முடித்து இந்தியா வந்து வக்கீல் தொழிலில் அவருக்கு ஏற்பட்ட தோல்விகள் எல்லாம் ஒளிவு மறைவின்றி எழுதியிருக்கிறார். பம்பாய் ஹைகோர்ட்டில் தினமும் வழக்காடுவதை பார்க்க போய், அங்கேயே குறட்டை விட்டு தூங்கியதை படிக்கும்போது சிரிப்பு வந்தது. அவர் சுயசரிதையிலேயே எனக்கு பிடிக்காமல் போனது, சத்திய சோதனை என்கிற பெயரில் அவர் செய்த மருத்துவ சோதனைகள். அதற்கு ஒரு சமயம் தன் மகனையும் மரணத்தின் வாசலில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார். அவர் சட்டம் படித்த பாரிஸ்டர், சட்ட சோதனைகள் செய்யலாம், மனிதன் என்கின்ற முறையில் சமுதாய சோதனைகள் செய்யலாம், எந்த எண்ணத்தில் மருத்துவ சோதனைகள் செய்தாரோ. அவர் கொள்கைகள் பிடிக்காமல் அவரிடமிருந்து விலகிய மூத்த மகன் ஹரிலால் காந்தியை பற்றி சொல்லும்போது 'அவனை திருத்த முடியாதது ஒரு வருந்ததக்க தோல்வி' என்று குறுப்பிடுகிறார். ஹரிலால் காந்திக்கும், மகாத்மாவுக்கும் இருந்த் உறவை பற்றி 'gandhi my father' என்று ஒரு ஹிந்தி படம் வர இருக்கிறது.

காந்தியின் ஒவ்வொரு சோதனைகளிலும், அவர் மனசாட்சியின் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்கிறார். அதனால் ஒரு கொள்கையை எப்படி உறுவாக்கிறார், அந்த கொள்கைகளை எப்படி மற்றவர்க்கும் புரிய வைத்து அனைத்து தரப்பினரையும், ஆங்கிலேயர், ஜெர்மானியர், இந்தியர்கள் முதற்கொண்டு, எப்படி அரவனைக்கிறார் என்று படிக்கும்போது வியப்பாய் இருக்கிறது. முடிவாக ஒரு ஆச்சர்யமான தகவல், தென் ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர்க்கு எதிராக முதல் போராட்டமாக அவர் எடுத்து போராடியது, பாலசுந்தரம் என்கிற ஒரு தமிழர், கொத்தடிமையாக, தென் ஆப்பிரிக்கா வந்து தன் ஆங்கிலேய முதலாளியால் துன்புறுத்தபட்டதற்கு. காந்திக்கு தமிழ் நன்றாக புரியும் ஆனால் பேச வராது, ஒருமுறை தன் ஆசிரமத்தில் இருந்த தமிழ் குழந்தைகளுக்கு ஜி.யு போப் புத்தகத்தின் துணையோடு தமிழ் சொல்லி கொடுத்திருக்கிறார். தமிழும், தெலுங்கும் தான் சாவதற்குள் முழுமையாக கற்று கொள்வது அவருக்கு ஒரு கனவாகவே இருந்தது.

Saturday, June 30, 2007

அங்கீகாரம்

நான் பள்ளியில் படிக்கும்போது எப்போதும் ஒரு அங்கீகாரத்திற்காக ஏங்கியிருக்கேன். என்ன மாதிரி அங்கீகாரம்? ஒன்னும் பெருசா இல்ல, என் பெயர் சொன்னால் மத்த செக்ஷன் பையன்களுக்கும் தெரியனும். முடிஞ்சா பள்ளிக்கே தெரியனும். நான் படிக்கும்போது அதுக்கு ரெண்டே வழிதான். ஒன்னு விளையாட்டில் பெரிய ஆளா இருந்து வெளியில பதக்கங்கள் வாங்கனும். அப்படி வாங்கினா, ஸ்கூல் அசெம்பிளி மீட்டிங்கில் மேடைக்கு கூப்பிட்டு பரிசு கொடுப்பார்கள், எல்லோரும் கைதட்டுவார்கள். இத விட்டா அடுத்த வழி, நல்லா படிச்சு முதல் மூன்று ரேங்க்குள் வாங்கனும். Half yearly, quarterly ரிப்போர்ட் கார்டை எப்போதும் AHM வகுப்புக்கு எடுத்து வந்து, முதல் மூன்று ரேங்க் வாங்கியவர்களுக்கு மட்டும் பெயர் சொல்லி கூப்பிட்டு கையில் கொடுப்பார். எல்லோரும் கைதட்டுவார்கள். மற்ற கார்டுகளை class teacherஇடம் கொடுத்துவிட்டு போய்விடுவார். அவரோ class leaderஇடம் கொடுத்து எல்லோருக்கும் கொடுக்க சொல்லிவிடுவார். எப்படியாவது முதல் மூன்று ரேங்க்கிற்குள் வாங்கிவிட வேண்டும் என்று நானும் ரொம்ப காலமாய் போராடினேன். ஒன்பதாவது படிக்கும்போது quarterly examல் அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தது. Answers sheet எல்லாம் வாங்கி பார்த்ததில் எப்போதும் மூன்றாவது ரேங்க் வாங்கும் மாணவனும் நானும் ஒரே total வாங்கியிருந்தோம். அப்படி இருக்கும்போது ரெண்டு பேருக்கும் சேர்ந்து மூன்றாவது ரேங்க் கொடுத்து, அடுத்து ஐந்தாவது ரேங்க் கொடுப்பார்கள். எனக்கு ஒரே சந்தோஷம் எப்படியும் இந்த முறை கைதட்டலோடு நாமும் AHM கையால் ரிப்போர்ட் கார்ட் வாங்கிடலாம். அந்த நாளும் வந்தது நானும் ஆவலோடு AHM அழைப்பார் என்று உட்கார்ந்திருந்தேன். அவர் வழக்கம் போல் முதல் ரேங்க், இரண்டாவது ரேங்க் எடுக்கும் மாணவர்களை கூப்பிட்டு அவர்களுக்கு ரிப்போர்ட் கார்டை கொடுத்தார், வழக்கம் போல் கைதட்டல்கள், மூன்றாவது ரேங்க், முதலில் என்னை கூப்பிடுவார் என்று நினைத்தேன், அவரோ மற்றவனை கூப்பிட்டார். அவனிடம் கார்டை கொடுத்துவிட்டு class teacherஇடம், 'மற்றதை நீங்கள் கொடுங்கள்' என்று கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார். எனக்கோ ஒரே ஏமாற்றம். பிறகு தான் தெரிந்தது, இரண்டு நாட்கள் முன்பே என்னோடு ஒரே total எடுத்தவன், தமிழில் ஒரு கேள்விக்கு ஆசிரியர் மார்க் கம்மியாய் போட்டிருக்கிறார் என்று வாதாடி அவரிடம் கேட்டு இரண்டு மார்க் கூட எடுத்துவிட்டான். எனக்கு நன்றாய் தெரியும் இந்த வேலையை நாங்கள் யாரும் செய்ய முடியாது. முதல் மூன்று ரேங்க் எடுப்பவர்கள் என்ன சொன்னாலும் முக்கால்வாசி ஆசிரியர்கள் தலையாட்டிடுவர். ஆகவே அந்த முறை எனக்கு நான்காவது ரேங்க். நான் அதிகமாய் போனது நான்காவது ரேங்க் வரையே. எனக்கு அழுகையாய் வந்தது. என்ன செய்வது. At least எங்கள் ஆசிரியர் என் முன்னேற்றத்தை கவனித்து ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம். அதுவும் இல்லை. வீட்டில் ரிப்போர்ட் கார்டை கொடுத்தேன். அப்பா வழக்கம்போல் முதல் ரேங்க் ஏன் வாங்கவில்லை என்று திட்டியபடியே கையெழுத்து போட்டார். ஒரு நேர்மையற்ற இரண்டு மதிப்பெண்ணில் என் அங்கீகாரத்தை பள்ளியில் இழந்தேன். இந்த ஒரு விஷயத்தில் தான் நான் அமேரிக்க கல்வி முறையை பாராட்டுவேன். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனின் தனித்திறமையை கொணர்ந்து அவனுக்கு ஊக்கத்தையும் அங்கீகார்த்தையும் வழங்குகின்றனர். கண்டிப்பாய் நம் கல்விமுறையில் மாற்றம் வேண்டும். வெறும் syllabus மாற்றம் மட்டும் போதாது.கல்வி முறையோ கற்பிக்கும் முறையோ மாற வேண்டும் என்று சொல்லவில்லை. ஒவ்வொரு மாணவனும் எப்படி உருவாக்க வேண்டும் என்கின்ற ஆசிரியர்களின் புரிதலில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும்.

Monday, March 12, 2007

மழை

(இன்று எங்கள் ஊரில், மதியம் அடைமழை பெய்தது. அலுவலகத்தின் ஜன்னலோரம் மழையை எட்டி பார்த்துகொண்டிருந்த எனக்குள், வைரமுத்து வந்துவிட்டார்.)

வானின் மழை
தண்ணீர் பந்தல்

காதல் மழை
ஆயிரம் முத்தம்

அன்பின் மழை
கண்ணீர் துளிகள்

அறிவின் மழை
ஆன்றோர் சொற்கள்

கற்பனை மழை
காதல் கவிதை

விற்பனை மழை
தள்ளுபடி திருவிழா

கவிதைகள் மழை
இலக்கியப் படைப்பு

அழகின் மழை
குழந்தையின் சிரிப்பு

அரசியல் மழை
தேர்தல் வாக்கு

மரங்களின் மழை
இலையுதிர் காலம்.

Wednesday, March 07, 2007

பருத்திவீரன்

வெகுநாட்களுக்கு பிறகு ஒரு மண் வாசனை மணக்க ஒரு கிராமத்துப்படம். கிழக்குச்சீமையிலேக்கு பிறகு நேட்டிவிட்டியுடன் வந்திருக்கும் படம். சூர்யா தம்பி கொடுத்து வைத்தவர், சூர்யாவுக்கு பத்துப்படம் பிறகு நந்தாவில் வந்த வாய்ப்பு இவருக்கு முதல் படத்திலேயே நடிப்பதற்கு கிடைத்திருக்கிறது. கதாப்பாத்திரப்படைப்பு தான் படத்திற்கு பலமே. கார்த்தியும் சரவனனும் அடிக்கும் லந்துகள், கவுண்டர் சத்யராஜுக்கு பிறகு திரையில் பார்க்க முடிகிறது. அதிலும் ஜெயிலுக்கு போய் வந்து ஒரு நாட்டுப்புற கலைஞர்களுடன் அவர்கள் அடிக்கும் லூட்டி, முள்ளும் மலரும் படத்தில் தலைவர் குடித்துவிட்டு நாதஸ்வர கோஷ்டியை வாசிக்கி சொல்லி அடம்பிடிக்கும் காட்சியை ஞாபகப்படுத்துகிறது. சாதாரண ஒரு கதையை, காதல் படம் போல் காட்சியமைப்புகளாலும், பாத்திரப்படைப்புகளாலும் மெருகேற்றி, அருமையான ஒரு படமாய் தந்திருக்கிறார் அமீர்.

Sunday, January 07, 2007

புதுப்பாடல்கள்

சமீபத்தில் நான் கேட்டு ரசித்த புதுப்பாடல்களில், என்னை வரிகளாலும் இசையாலும் கவர்ந்தன இரண்டு பாடல்கள். முதல் பாடல் பொறி படத்தில் வரும் "பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்", இசை தீனா. வழக்கமான தமிழ் சினிமா பாடல்களில் காதலியை, மானே, தேனே, நிலவே, மலரே என்று காலம் காலமாய் வரும் இலக்கிய clicheக்களை போட்டு கொன்றிருப்பார்கள். கொஞ்சம் அதைத் தாண்டி "உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா, கோதுமையா, மைதாவா" என்று commodities trading செய்திருக்கிறார்கள். மிக சமீபத்தில் "கண்ணும் கண்ணும் nokia, aiwa, LG, videocon" என்று commercial marketingம் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த பாடல்களில், நாம் அன்றாடம் subtleஆக ரசிக்கும், நம் வாழ்க்கையில் இயல்பாய் இருக்கும் விஷயங்களை தொகுத்து அதை காதலிக்கும், காதலனுக்கும் ஒப்பிட்டிருக்கிறார்கள். "ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்", "அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்" வரிகள் அபாரம்.

(பல்லவி)
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்லக்கோபம்
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

(சரணம்1)
பயணத்தில் வருகின்ற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்
பரிட்சைக்கு படிக்கின்ற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை
புகைப்படம் எடுக்கையில் தினறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீ தானே

(சரணம்2)
தாய்மடி தருகிற அரவனைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
தேய்பிறை போல் வரும் நகக்கனுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்
செல்போன் சினுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவர் தருகிற பரிசுப்பொருளும்
அன்பே அன்பே நீதானே
எழுதும் கவிதையில் எழுத்துப்பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ தானே

இரண்டாவது பாடல் உன்னாலே உன்னாலே படத்தில் வரும் "வைகாசி நிலவே". இந்த பாடல் நான் முதலில் சொன்ன இலக்கிய clicheக்குள் வந்தாலும், செல்போன், ரிங்டோன் சமாசாரங்கள் இல்லாததால் மன்னிக்கலாம். ஹாரிஸ் இந்த பாடலுக்கு நல்ல இசை அமைத்திருக்கிறார்.

Saturday, December 02, 2006

பயணங்களில்..planes, trains and automobiles

போன வாரம் thanksgiving holidaysல் என் நன்பர் IBM செந்தில் அழைப்பை ஏற்று, நான் மிகவும் ரசிக்கும் நகரமான sanfrancisco சென்றேன். அங்கே dallasலிருந்து அவரின் இன்னொரு நன்பரும் சேர்ந்து கொள்ள, அப்படியே இயற்கையை ரசிக்கலாம் என்று, வடக்கு கலி·போர்னியாவில் இருக்கும் crater lake மற்றும் lava beds national park ஆகிய இடத்திற்கு சென்றோம். crater lake பார்டரை சற்று தாண்டி ஆரெகான் மாநிலத்தில் இருக்கிறது, lava beds கலி·போர்னியாவில் இருக்கிறது. இரண்டு இடமுமே மிக அழகாகவும் adventerousஆகவும் இருந்தது. அமேரிக்காவில்தான் பயணம் செய்ய எவ்வளவு வசதிகள். சற்று காலச்சக்கரத்தை சுழற்றி விட்டு பின்னோக்கி பார்த்தால், படிக்கின்ற காலத்தில் எவ்வளவு விடுமுறைகள், எவ்வளவு பயணங்கள்.

சிறு வயதில் விடுமுறை, பயணம் என்றாலே எனக்கு முதலில் ஞாபகம் வருவது, ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் நாங்கள் ஊருக்கு போகும் ரயில் பயணங்கள் தான். அப்பா எங்களுக்கு லீவ் விட்டு ஒரு வார்த்திற்குள்ளேயே ரயில் டிக்கெட் ரிசர்வ் செய்துவிடுவார். முக்கால்வாசி கம்பன் எக்ஸ்பிரஸ் தான். அதுதான் விடியற்காலையில் எங்கள் ஊரிற்கு போய் சேர்ந்து விடும். அத்தனை பேரையும் ஆட்டோவில் அள்ளிப்போட்டு மயிலாப்பூரிலிருந்து எழும்பூர் செல்லும் முதல் பயணம். வருடத்தில் அந்த ஒரு நாள் தான் நான் மயிலாப்பூரை விட்டு வெகு தூரம் வெளியே வந்த நாளாய் இருக்கும். வழக்கமான ரூட், ராயப்பேட்டை, சத்யமூர்த்தி பவன், அண்ணாசாலை, கமிஷனர் office வழியே எக்மோர். ஏனோ சிறு வயதில் அது ரொம்ப தூரம்போல் தெரியும். வழியில் வுட்லேண்ட்ஸ் தியேட்டரில் என்ன படம் ஓடுகிறது, ராஜ் தியேட்டரில் என்ன படம் ஓடுகிறது, ஜெயப்ரதா தியேட்டரில் என்ன படம் ஓடுகிறது என்று பார்த்துக்கொண்டே போவேன். எனக்குத் தெரிந்து ஜெயப்ரதா தியேட்டரில் 'திருட்டு புருஷன்' என்று ஒரு பட போஸ்டர், மூன்று வருடம் தொடர்ந்து ரயில் பிடிக்க போகும் போது பார்த்திருக்கிறேன். அது ஏன் எந்த ரெக்கார்டிலும் வரவில்லை என்று தெரியவில்லை. ஒரு வேளை பெரிய A போட்ட கோக்குமாக்கான படமாக இருந்ததால் இருக்குமோ. சரி போதும். மேட்டரை விட்டு மேட்டருக்கு வருகிறேன். ரயில் பயணங்களில் முதலில் நடப்பது எனக்கும் என் அண்ணன் தங்கைக்கும் நடக்கும் ஜன்னல் ஓர சீட் சன்டை தான். அந்த இரவு நேர பயணங்களிலும், வெளியே கும்மிருட்டாக ஒன்றுமே தெரியாமல் இருந்தாலும் எனக்கு ஜன்னலோர பயணம் தான் மிகவும் பிடிக்கும். எப்படியாவது ஒரு ஜன்னலை பிடித்துவிடுவேன். மற்றவர்கள் தூங்கினாலும் எனக்கு தூக்கம் வராது. வெளியே வேடிக்கை பார்த்து ஒவ்வொரு ரயில் ஸ்டேஷனையும், விட்டில் பூச்சிகள் பறக்க எறியும் ட்யூப்லைட்களையும் ரசித்துக்கொண்டே முழித்திருப்பேன். அப்போதெல்லாம் நிலக்கரி என்ஞின் இருந்த சமயம். கம்பன் எக்ஸ்பிரஸ் விழுப்புரம் வரை எலெக்ட்ரிக் என்ஞினிலும், விழுப்புறம் டு மயிலாடுதுறை வரை டீஸல் என்ஞினும் அதற்குமேல் கரி என்ஞினும் மாற்றி கோர்த்து ஓடும். காலை நாலு மணிக்கு மயிலாடுதுறையில் கரி என்ஞினை சூடு கிளப்பிக்கொண்டிருப்பார்கள். பிறகு அதை கம்பனில் மாட்டி இழுப்பார்கள். கரி என்ஞினில் போவதே ஒரு சுகம் தான். நன்றாக நம்மை தாலாட்டும். கம்பன் விடியற்காலை ஆறு அறரை மணிக்கெல்லாம் திருவாரூர் ஸ்டேஷன் வந்தடையும். திருவாரூர் வந்தவுடன் "மல்லி, முல்லை, ஜாதிமல்லி" என்று ஒருவர் கணீர் குரலோடு பூ விற்றுக்கொண்டிருப்பார். வேலை கிடைத்து கடைசியாக ரயிலில் நான் போன போது அந்த குரல் கேட்காதது ஒரு மெல்லிய சோகம்.

ரயில் பயணத்திற்கு அடுத்தது எனக்கு பிடித்தது பஸ் பயணம் தான். எட்டாவதில் தான் ஒரு முழு நீள பஸ் பயணத்தில் என் தாய்மாமாவோடு ஊருக்கு சென்றேன். அவர் அடிக்கடி மாற்றலாகி தமிழ்நாட்டையே சுற்றுவார், அதனால் அவருக்கு பஸ் பயணம் அத்துப்படி. சென்னை டு கடலூர், கடலூர் டு மயிலாடுதுறை, மயிலாடுதுறை டு திருவாரூர் என்று பல பஸ்கள் மாறி செல்வது தான் அவருக்கு பிடிக்கும். நம் ஊர் தூங்கா பஸ் ஸ்டாண்டுகள், ட்யூப்லைட்கள், டீக்கடைகள் அதில் கேட்கும் எம்ஜியார், இளையராஜா அல்லது திண்டுக்கள் லியோனி ஆடியோக்கள் இதெல்லாம் நம் அடையாளங்கள். இன்றைக்கும் இவைகள் ஏற்படுத்தும் ஒரு ambience தான் பயணிகளின் களைப்பை போக்குவதற்கு இன்றியமையாதவையாக இருக்கிறது. அதனை பழகியவர்களுக்கு அதை ரசிக்க தெரியும். நம் ஊர் பஸ் பயணங்களிலே நான் வியப்பது நம் ஓட்டுநர்களின் திறமையை தான். எட்டு அடி ரோட்டின் குறுகிய திருப்பங்களில் அவ்வளவு பெரிய வண்டியை லாவகமாக திருப்புவார்கள். அமேரிக்காவில், நியுயார்க் மன்ஹாட்டனில் வண்டி ஓட்டுபவர்கள் தான் உலகத்திலே சிறந்த ட்ரைவர்கள் என்று ஜம்பம் அடிப்பவர்களையெல்லாம் நம் பஸ்களில் ஒரு முறை ஏற்ற வேண்டும்.

ரயில், பஸ் பயணங்கள் பிறகு நான் ரசிப்பது மாட்டு வண்டி பயணம் தான். எங்கள் ஊரில் அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு இருக்கும் மாட்டு வண்டியை வைத்து தான் அவரவர்களின் மதிப்பே. வெறும் கூரை இல்லாத fence மட்டுமே இருக்கும் பாறை வண்டிகள் ஒரு SUV போல், கூரை வத்து ஸ்டைல் ரிம் வத்து alloy wheelsஓடு காணப்படும் கூட்டு வண்டிகள் luxury sedanகள் போல். சித்திரையில் நடக்கும் பழயங்குடி மாரியம்மன் கோவில் திருவிழா தான் மாட்டு வண்டி மாநாட்டின் main destination. திருவிழாவிற்கு போகும்போது adventurousஆக SUVல் போய்விடுவேன், அங்கே நன்றாய் சுற்றி பார்த்து, விளையாடி டையர்டாகி திரும்பும்போது ஏதாவது ஒரு luxury sedanல் தொற்றி கொள்வேன். ஒரு முறை அத்தை ஊருக்கு சென்றபோது, மாமா தயவோடு மாட்டு வண்டியை ஓட்டியிருக்கிறேன். கையில் இருக்கும் மாட்டின் இரு கையிறு தான் steering and brakes, குச்சிதான் accelerator.

ரயில், பஸ், மாட்டு வண்டி பிறகு நான் ரசிப்பது அப்பாவோடு அம்பாசிடர் காரில் நான் மட்டுமே போகும் திருப்பதி ட்ரிப்கள். அது ஏன் என்னை மட்டும்? ஏனேன்றால் நான் தான் வீட்டிலே காரில் வாந்தி எடுக்காத ஒரே ஆள். அது என்னமோ எவ்வளவு imported models வந்தாலும் நம்ம ஊரில் அம்பாசிடைரை அடிச்சுக்க முடியாது. I believe it is 'the car' for indian roads and people. அம்பாசிடர் காரிலும் எனக்கு ஜன்னலோர பயணமே பிடிக்கும். ஜன்னலை திறந்து எதிர்காற்று முகத்தில் பட வேடிக்கை பார்த்துக்கொண்டே போவது மிகவும் பிடிக்கும். அதிலும் எப்போதும் அம்பாசிடரில் வரும் சின்ன பெட்ரோல் வாடையும் கூடவே ஜேசுதாஸ் பாடலும் மேலும் கிக் ஏற்றும்.

ரயில், பஸ், மாட்டுவண்டி, அம்பாசிடர் இதற்கு அடுத்தது நான் அதிகம் போனது ஆனால் அவ்வளவாக பிடிக்காதது விமான பயணம் தான். அது என்னவோ நான் மற்றதில் பயணித்ததை விட விமான பயணம் எனக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கவில்லை. ஒருவேளை economy classல் மட்டும் சென்றதாலோ, இல்லை நான் மற்றதிலும் இதிலும் பயணத்திதில் இருந்த வயது வித்தியாசமோ, என்ன காரணமோ தெரியவில்லை. ஒன்று மட்டும் உன்மை, இப்போது அசை போட்டு பார்த்தால், நான் சிறுவயதில் சென்ற ரயில், பஸ், மாட்டுவண்டி, அம்பாசிடர் பயணங்களில் வெறும் பயணத்தை மட்டுமே ரசித்தேன், மனதில் வேறு எதுவும் இருந்ததில்லை. ஆனால் இப்போது விமானத்தில் பறக்கும் போதெல்லாம் ஏனோ மனதில் வருந்திக்கொள்ள பல விஷயங்கள், எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள்.

Thursday, October 19, 2006

Creativity

உலகத்தின் மிகச் சிறிய திகில் கதை எது? இதுதான்:
"உலகின் கடைசி மனிதன் தனியாக ஓர் அறையில் உட்கார்ந்திருந்தான். கதவு தட்டப்பட்டது."
உலகத்தின் மிகச் சிறிய விஞ்ஞான சிறு கதை இதுதான்:
கதையின் தலைப்பு "டெலிபதிக்காரர்களுக்கான விஞ்சானக் கதை" அவ்வளவு தான் கதை. இது சமீபத்தில் விகடனில் படித்தது. போன வார விகடனில் மதன் கேள்வி பதிலில் ஒரு கேள்வி: "மனித குலத்தில் எழுந்த முதல் கேள்வி எதுவாக இருக்கும்?" இதற்கு அவர் சொன்ன பதில் "எவ இவ?!".

chanceஏ இல்ல!!!...இவற்றின் எல்லாவற்றிலும் நான் பார்த்து பிரமிப்பது இவர்களின் அசாய creativity தான். எப்படி தான் இவர்களுக்கு மட்டும் தோன்றுகிறதோ. இது தான் மற்றவர்களையும் கலைஞர்களையும் வேறு படுத்துகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் ஒரு creator இருக்கிறான், ஒரு சில பேர் அதை வெளிக்கொனர்ந்து வெற்றி பெறுகிறார்கள். சிலர் அதை உள்ளேயே புதைத்து சாமானிய உலகத்திற்குள் கானாமல் போய் விடுகின்றனர். ஒரு மகாக்கவிஞனுக்குள் இருக்கும் இந்த அதீத creativityக்கு challenge வரும்போது தான் அவன்:
"பல வேடிக்கை மனிதரைப் போல் - நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ.." என்று வெடிக்கிறான். நம்மில் பலர் ஆழ் மனதில் ஏங்கி தவிக்கும் அந்த creative satisfactionக்கு தான் பலவற்றை இழக்கிறோம், அதற்காக வருத்தப்படவும் மாட்டோம். உதாரணத்திற்கு மிகக் கஷ்டப்பட்டு ஒவ்வொரு வார்த்தையாய் தமிழில் அடித்து, அதை யுனிக்கோடாக மாற்றி வலைப்பூக்களில் பதிவு செய்கிறோம், எல்லாம் எதற்காக, யாராவது ஒரு ஜீவன் அதை விமர்சித்தோ, பாராட்டியோ பின்னூட்டம் போட மாட்டார்களா என்பதற்கு தானே.

சரி சீரியஸாக பேசாமல் மீண்டும் தலைப்பு பற்றி பேசலாம். நான் பார்த்து, ரசித்து, பிரமித்த, நம்மவர்களின் creative விஷயங்களை தொகுக்க நினைக்கிறேன், ஒரு partial list இதுதான்:
1) இளையராஜாவின் பல பாடலின் orchestration and composition. உதாரனம்: 1) பூவே செம்பூவே 2) பூங்கதவே தாழ் திறவாய் etc.
2) வைரமுத்துவின் பல பாடல்கள், அவரின் சொல் ஆளுமை.
உதாரனம்: "பனி விழும் மலர் வனம் -உன்
பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்"
3) சுஜாதாவின் சிறுகதைகள். உதாரனம்: முதல் மனைவி, வி.சி கதைகள்
4) சமீபத்தில் வந்த வைகைப்புயலின் காமெடிகள் (எழுதியது யாரோ!!). "எனக்கு அவ்வளவு சீக்கிரம் கோவம் வராது..", "என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாமா..", "கட்டடம் strong தான், basementதான் கொஞம் வீக்.."
5) crazy மோகனின் நகைச்சுவை வசனங்கள்.
உதாரனம்:
"என் மகனுக்கு பயங்கர ஞாபகசக்திங்க"
"அப்படியா"
"ஆமாங்க...தம்பி உன் பேர் என்ன"
"முத்துபாண்டி"
"பாருங்க இருபது வருஷத்துக்கு முன்ன வச்சது, இப்பவும் ஞாபகம் வச்சிருக்கான்"
6) நா.முத்துக்குமாரின் திரைப்பாடல்கள். உதாரனம்:
"தொட்டு தொட்டு என்னை
வெற்றுக் களி மன்னை
சிற்பமாக யார் செய்ததோ"
7) ராஜ்குமார் ஹிரானியின் திரைக்கதை அமைப்பு. முதல் munnabhaiயிலும், இரண்டாவது munnabhaiயிலும் கலகலப்பான சினிமாவில், மனிதத்தனமான விஷயங்களை அவர் கலந்த முறை பிரமிக்க வைக்கிறது. சிரிக்கவும் வைத்து, சீரியஸாக சிந்திக்கவும் வைக்கிறார்.

இது போல் எத்தனையோ இருக்கு.
கடைசியாய் ஒரு சுய விளம்பரம். நான் எழுதியதில் creativeஆக, இது நான்தானா என்று நான் வியந்த ஒன்றே ஒன்று:
மூன்று வருடம் முன்பு, தீவரமாய் திரைக்கதை எழுத பயிற்சி எடுத்து, பல புத்தகங்கள் படித்து, பல திரைக்கதைகள் படித்து, பார்த்து முடிவில் நானே ஒரு கதையை
திரைக்கதையாய் எழுதினேன். 70% எழுதி முடித்து, 30% இன்னும் மன்டையில் இருக்கிறது. அதில் ஒரு சின்ன காட்சி:

கதாநாயகன் கிரிஷ்ணா தன் வீட்டில் பார்த்து பேசிய பெண்ணை, அவன் முதலில் பார்க்க ஒரு ஓட்டலில் காத்திருக்கிறான். மெனுக்கார்ட் அவன் முகத்தை மறைக்க படித்துக்கொண்டிருக்கிறான். அப்போது அகிலா அங்கே வருகிறாள்.
அகிலா: எக்ஸ்க்யூஸ் மீ
கிரிஷ்ணா: (மெனுக்கார்டை இறக்கி பார்க்கிறான். அகிலாவின் அழகை பார்த்து வாயடைத்து போகிறான்)
அகிலா: நான் தான் அகிலா...Hi
கிரிஷ்ணா: (அகிலா முகத்தை பார்த்தே எழுந்து கை கொடுக்க முயல்கிறான்) Hi...நான்...வந்து...அது...என் பேர்...பேரு...பேரு.....சே என்ன பேர் வச்சாங்க.....

Tuesday, October 17, 2006

என் சினிமாக்கள் - 1

இந்த தொடரில் என்னை பாதித்த, நான் ரசித்த தமிழ் சினிமாக்கள் பற்றி சொல்ல போகிறேன். சிலர் சினிமா ஒரு சீரியஸான மெசெஜ் சொல்ல வேண்டும் என்று சொல்லுவார்கள், சிலர் அது பொழுதுபோக்கு விஷயமாக மற்றுமே இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள், என்னைக் கேட்டால் அது ஏதாவது ஒரு விஷயத்தில் நல்ல சினிமாவாக இருக்க வேண்டும். அப்படியானால் நல்ல சினிமாவின் இலக்கனம் தான் என்ன? ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், அது ஞாபகத்தில் தங்க வேண்டும். அப்படி என் ஞாபகத்தில் தங்கிய, என்னை பிரமிக்க வைத்த சினிமாக்கள் சிலவற்றை இந்த பகுதியில் எழுத உள்ளேன்.
மூன்றாம் பிறை:
இப்படி ஒரு தொடர் ஆரம்பித்தால், இந்த படத்தை பற்றி முதலில் சொல்வது தான் சரியாய் இருக்கும். சிறு வயதில் மற்ற பிள்ளைகள் போல சினிமாவை வெறும் பொழுதுபோக்காக மற்றுமே கண்டுகளித்த என்னை முதன் முதலில் கேமராவின் பின்னால் நடக்கும் விஷயங்களை அறிய தூண்டிய படம் இது. இந்த படத்தை பற்றி முதலில் என் அம்மா தான் எனக்கு பல விஷயம் சொல்லியிருந்தார். இதில் கமல் நடிப்பு அழகாய் இருக்கும், ஸ்ரீதேவி நன்றாய் நடித்திருப்பார், கண்ணதாசன் கடைசியாய் பாட்டு எழுதியிருப்பார் என்று பல விஷயங்கள் சொன்னார். ஆனால் அப்போது வீட்டில் வீடியோ ப்ளேயர் எல்லாம் இல்லை, அதனால் இந்த படத்தைப் பற்றி கேள்விப்பட்டு வெகு நாள் வரை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்தேன். அப்போழுதெல்லாம் டிடி தான் ஒரே சேனல், டிடியில் நல்ல படங்கள் பார்க்க வேண்டுமானால் ஞாயிறு கிழமை வரை காத்திருக்க வேண்டும். ஞாயிறு கிழமைகளில் மதியம், காது கேளாதவர் செய்தி முடிந்தபிறகு 1:00 மணி அளவில் தேசிய விருது வாங்கிய படங்கள் போடுவர். அடிக்கடி வங்க மொழி படங்கள், மலையாள மொழி படங்கள் வரும். எப்போதாவது தமிழ் படங்கள் வரும். பலகாலம் இது டிடியின் சதி என்று நினைத்திருந்தேன், பிறகு தான் தெரிந்தது தொன்னூறுகள் வரை, தேசிய விருதுகள் வாங்கிய தமிழ்ப் படங்கள் மிகக் குறைவு என்று. எனினும் ஞாயிற்று கிழமைகளில் பல நல்ல படங்களை பார்த்தேன். அத்திப்பூத்தாற் போல சில சமயம், வெள்ளி கிழமை நடுராத்திரி டிடியில் சில படங்களை திரையிடுவர். ஒரு சமயம் அப்படி வெள்ளி கிழமை இரவு மூன்றாம் பிறை காட்ட போகிறார்கள் என்று செய்தி கேட்டு. நான் மட்டும் ராத்திரி 12 மணிவரை விழித்திருந்து, கடைசி இந்தி செய்தி முடிந்து, அந்த படத்தை பார்த்தேன். முதன் முதலாய் ஒரு தமிழ் படத்தை பார்த்து நான் பிரமித்தது இந்த படத்தை தான். ஒளிப்பதிவில் ஒரு புதிய பரிணாமத்தை காட்டியிருப்பார் பாலுமகேந்திரா. கதை, திரைக்கதை, இசை, பின்னனி இசை, நடிப்பு என்று எல்லா விதத்திலும் அசத்தியிருப்பார். 'பொன்மேனி உருகுதே..' தான் படத்தின் திருஷ்டி பரிகாரம். பாடல்களில் நடிகர்கள் வாயசைக்காமல் வெறும் மாண்டேஜ் ஷாட்களில் கச்சிதமாக காட்டியது இந்த படத்தில் தான் என நினைக்கிறேன். இந்த படத்தில் பாடல் என்றால் பொதுவாக எல்லோருடைய ·பேவரைட் கண்ணே கலைமானே பாடலாக தான் இருக்கும். எனக்கும் இதுதான் பிடித்த பாடல், ஆனால் படத்தோடு பார்க்கும் போது நான் மிகவும் ரசித்தது 'பூங்காற்று புதிதானது..' பாடலை தான். பல்லவியில் ஒரு வெஸ்டர்ன் ஸ்டைலில் ஆரம்பித்து, சரணத்தில் ஹிந்துஸ்தானியில் குழைத்திருப்பார் இளையராஜா. இந்த பாடலின் நடுவில், ஸ்ரீதேவியின் பாவாடை நுனி ஊட்டி ரயில் தண்டவாளத்தில் மாட்ட, எதிரே ரயில் நெருங்கி வர அப்போது ஒரு இசை போட்டிருப்பார் ராஜா, எனக்கு ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம், முன்னேயே அப்படி ஒரு காட்சியை யோசித்து பாலுமகேந்திரா கேட்டிருப்பாரோ, அல்லது அப்படி ஒரு ஷாட் எடுத்து அதை அழகாய் அந்த பாடலில் பொருத்தியிருப்பாரோ. மிக அழகான ஒரு காட்சி அது.

Friday, September 01, 2006

வேட்டையாடு விளையாடு - விமர்சனம்

இது கமல் படமா, கௌதம் படமா? இது தான் எனக்கு தோன்றிய முதல் கேள்வி. கமல் ரொம்ப underplay செய்திருக்கிறார். ஆனாலும் அவருக்கு ஒரு ஜேம்ஸ் பாண்ட் பட ஸ்டைலில் intro song வைத்து அசத்தியிருக்கிறார் கெளதம். ஆங்கில பட ஸ்டைலில் serial killing investigation என்று தொடங்குகிற படம் பாதிக்கு மேல் காக்க காக்க பார்ட் டூ போல் போகிறது. ஆனாலும் உன்மையில் கௌதம் திறமையானவர் தான். film making படு வித்தியாசமாய் இருக்கிறது. ஒளிப்பதிவு ரவிவர்மனும், எடிட்டிங் ஆண்டனியும் படத்தின் பாதி பலம். அதிலும் ஆண்டனி அட்டகாசமாய் எடிட்டிங் செய்திருக்கிறார். காக்க காக்கவும், கஜினியும் இவரின் முந்தைய படங்கள். தலைவர் தான் நம் தலைவர் சிவாஜி படத்திற்கும் எடிட்டர். பட்டையை கிளப்ப போவது உறுதி. கௌதம் வருங்காலத்தில் சினிமா டைரக்டராய் சோபிக்க முடியாவிட்டாலும், song album video டைரக்டராக நல்ல எதிர்காலம் உள்ளது. அருமையான picuturisation, அதிலும் 'நெருப்பே' பாடல் மை ·பேவரைட். படத்தின் ஒரே மைனஸ் பாய்ண்ட், கமல் ஜோதிகாவின் romance sceneகள். அதிலும் காக்க காக்க மாதிரியே வசனங்கள் இருக்கிறது. இளமையான சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் அது பொருந்தியது, ஆனால் அங்கிள் கமலுக்கு அது பொருந்தவில்லை.

Wednesday, August 02, 2006

படித்ததில் ரசித்தது

சமீபத்தில் ரசித்த பாடல். மொழி என்னும் படத்திற்காக கவியரசு வைரமுத்து எழுதிய பாடல். கவிஞனுக்கு கற்பனை தான் களஞ்சியம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் கவியரசு.

காற்றின் மொழி
ஒலியா, இசையா?
பூவின் மொழி
நிறமா, மணமா?
கடலின் மொழி
அலையா, நுரையா?
காதல் மொழி
விழியா, இதழா?
இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழியே தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை.


காற்று வீசும்போது
திசைகள் கிடையாது
காதல் பேசும்போது
மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல
மவுனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை
கடவுள் அறியாது

உலவித் திரியும் காற்றுக்கு
உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம்
சப்தக் கூட்டில் அடங்காது

வானம் பேசும் பேச்சு
துளியாய் வெளியாகும்!
வானவில்லின் பேச்சு
நிறமாய் வெளியாகும்!
உண்மை ஊமையானால்
கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில்
உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில்
அசைவு கூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

Thursday, July 20, 2006

பொன்னியின் செல்வன்

"பொன்னியின் செல்வன்... பொன்னியின் செல்வன்.. படித்துவிட்டீர்களா பொன்னியின் செல்வன்..பொன்னியின் செல்வன் படிக்கவில்லையா! நீங்கள் தமிழ் வாசகராக இருப்பதற்கே லாயக்கில்லாதவர்கள்" இப்படி தான் எல்லாரும் பொன்னியின் செல்வனை பற்றி சிலாகிக்கிறார்கள். கண்டிப்பாய் அது சிறந்த வரலாற்று புனிதங்களில் ஒன்று. அதை மறுப்புதற்கில்லை, ஆனால் அது மட்டும் தான் தமிழில் வந்த வரலாற்று நாவல்களிலே சிறந்தது என்று சொல்வது தான் கொஞ்சம் மிகையாக படுகிறது.

எனக்கு பொன்னியின் செல்வனை பற்றி முதலில் சொன்னது என் அம்மா தான். ஆனால் சிறு வயதில் அதை படிப்பதற்கு தான் வழியில்லாமல் இருந்தது. அப்பாவிற்கு நாங்கள் சிறுவயதில் தமிழ் புத்தகங்கள் படிப்பது அவ்வளவாய் பிடிக்காது. ஆங்கில அறிவை வளர்க்க வேண்டுமென்று வீட்டில் தினமும் இந்தியன் எக்ஸ்பிரஸ், மாதம் ஒரு முறை
ரீடர்ஸ் டைஜஸ்ட் இது போக அலமாரியெல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் GK புத்தகங்கள் தான். வீட்டிற்கு பக்கத்தில் ஒரு lending library இருந்தது, மாதம் பத்து ருபாயோ இருபது ரூபாயோ தான், ஆனால் நான் எவ்வளவு கெஞ்சி கேட்டும் அம்மா அங்கு சேர பணம் கொடுக்கவில்லை. ஒருவழியாய் நான் வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பித்ததும் அதே லைப்ரரியில் மெம்பராய் சேர்ந்து பொன்னியின் செல்வன் மட்டும் எடுத்து படித்தேன். ஒருவேளை பொன்னியின் செல்வன் நான் படித்த முதல் வரலாறு நாவலாக இருந்தால் எனக்கு ரொம்ப பிடித்திருக்குமோ என்னவோ, நான் முதலில் படித்தது சாண்டில்யனின் கடல்புறா. எப்பவோ அப்பாவிடம் கடல்புறா மூன்று பாகங்கள் கிடைக்க, அதை வீட்டிற்கு எடுத்து வந்தார். அப்போது எனக்கு 8ஆம் வகுப்பு காலாண்டு பரிட்சை விடுமுறை, வெளியே எங்கும் ஊர் சுற்றாமல் ஒரு பத்து பதினைந்து நாளில் மொத்த கதையையும் படித்து முடித்தேன், மொத்தம் 5400 மேல் பக்கங்கள். கடல்புறாவும் பொன்னியின் செல்வனை போலவே சோழர் காலத்தில் நடக்கும் கதை, ராஜேந்திர சோழன் அரியனையில் அமரும் சமயம் நடக்கும் கதை. கதை முழுவதும் சோழர்களின் கடல் கடந்த ராஜ்ஜியங்கள், கடல் போர்கள் பற்றி இருக்கும். வந்தியத்தேவனை போல இதில் இளையபல்லவன். ஷங்கர் படம் போல சாண்டில்யனின் வரிகள் எல்லாம் விறுவிறுப்பாய் இருக்கும், கடலின் பிரம்மாண்டத்தை நம் மனக்கண்ணில் ஒட விடுவார். கடல், மரக்களம், சீனர்கள், அரேபியர்கள் என்று ஒவ்வொன்றும் வித்தியாசமாய் சொல்லியிருப்பார். என்ன ஒன்றே ஒன்று, கதாநாயகி மட்டும் கதைக்குள் வந்தாள் என்றால் நாம் தாராளமாக ஒரு இரண்டு மூன்று பக்கம் திருப்பி கதையை தொடரலாம், அவ்வளவு விரிவாய் கதாநாயகிகளை விவரித்திருப்பார்.

பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் ஒன்றுமே வெற்றியடையவில்லை. எம்ஜிஆர் பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க திரைக்கதை எல்லாம் எழுத சொன்னாராம். வந்தியத்தேவனையும், அருள்மொழிவர்மரையும் இருவேடமேற்று நடிக்க என்னியிருந்தாராம், எங்கயோ படித்த ஞாபகம். பிற்காலத்தில் கமல் பொன்னியின் செல்வனை எடுக்க திட்டமிட்டு சுஜாதாவுடன் சேர்ந்து திரைக்கதை எழுதலாம் என்று உட்கார பிறகு எப்படியோ மருதநாயகத்திற்கு தாவிவிட்டார். அதன் பிறகு பொன்னியின் செல்வனை எடுத்தே தீர்வது என்று மணிரத்னம் தன் பென்சிலால் முழு திரைக்கதையும் எழுதி முடிக்க அதற்குள் கல்கியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கி விட்டனர். இரு கோஷ்டிகள் அதை டிவி தொடராக எடுப்பது என்று கிளம்ப, மணிரத்னம் தன் முயற்சியை கைவிட்டார். அந்த டிவி தொடர் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

ஒருவேளை பொன்னியின் செல்வன் சினிமாவாக வந்தால் இன்றைய தேதியில் அதன் perfect casting என்னவாக இருக்கும்? என்னை பொருத்தவரை வந்தியத்தேவனாக சூர்யா, அருள்மொழிவர்மனாக விக்ரம், நந்தினியாக அசின் அல்லது சிம்ரன் (ஒல்லியாக இருக்கும் பட்சத்தில்), குந்தவைக்கு perfect fit செளந்தர்யா ஆனால் அவர் இல்லாதலால் பத்மப்ரியா, சுந்தர சோழராக சிவக்குமார், மணிமேகலையாக த்ரிஷா, பெரியபழுவேட்டரையராக பெரியகருப்புத்தேவர் (அதான் விருமாண்டியில் பூசாரி), சின்ன பழுவேட்டரையராக வினுச்சக்ரவர்த்தி, ஆழ்வார்க்கடியனாக வெண்ணிறாடை மூர்த்தி (என் நன்பன் ராஜ்குமாருக்கு ஆழ்வார்க்கடியனுக்கு செந்தில் தான் மிகப்பொருத்தம் என்பான், அது ஒரு வைனவ கேரக்டராக இருப்பதால் எனக்கென்னவோ நம்ம மூர்த்தி தான் சரியாய் இருப்பார் என்று படுகிறது, provided அவர் கனைக்காமல் இருந்தால்) இவர்கள் மிக முக்கியமான பாத்திரத்துக்கு சரியாய் பொருந்துவார்கள். சரி அப்ப கடல் புறாவிற்கு? ம்ம்ம்..கடல் புறா பிரும்மாண்டத்திற்கு படம் எடுக்க நம் தமிழில் பட்ஜெட் இல்லை, மனது வைத்தால் பீட்டர் ஜாக்ஸன் எடுக்கலாம், அவர் எங்க இனிமே தமிழ் படிச்சு, புரிஞ்சி... அதெல்லாம் நடக்காத காரியம்.

Monday, July 17, 2006

சீரியல்...ஒரு serious பிரச்சினை

இந்த முறை அம்மா அப்பா என்கூட தங்கி இருக்க, அவர்களுக்கு போரடிக்காமல் இருக்க சன் டிவியையும், கே டிவியையும் இரண்டு மாதத்திற்கு இனையத்தில் subscribe செய்தேன். தமிழ் டிவியில் வரும் மெகாத் தொடர்களின் கொடுமைகளை பல வலைப்பூக்களில் படித்தாலும், அதன் தாக்கத்தை இந்த இரண்டு மாதங்களில்தான் நேரே கண்டேன். சொல்லி வைத்தாற்போல் எல்லா தொடர்களிலும் ஒரே கதை தான், இரண்டு பிரதான பெண் பாத்திரங்கள், ஒருத்தி குடும்பத்துக்காக போராடும், எப்போதுமே லிட்டர் கணக்காக அழுது வடிக்கும் ஹீரோயின், இன்னொருத்தி இவளின் அத்தனை முயற்சியையும் முறியடிப்பதற்காகவே பிறந்த மாமியாரோ, நாத்தனாரோ யாரோ ஒரு இன்னொரு பெண். இவர்களை சுற்றியே நகரும் கதை. இந்த சீரியல்களில் எல்லாம் ஆண்கள் பெரும்பாலும் atmosphere ஆர்ட்டிஸ்டுகளாகவே வந்து போவார்கள். மனைவியை சுற்றி கதை நகர்ந்தால் ஒரு புருஷன் கேரக்டர், ஒரு அப்பா கேரக்டர் (முக்கால்வாசி ஹீரோயினுக்கு அப்பா கிடையாது, விதவை அம்மா ஒரு கூடுதல் சென்டிமென்ட்), ஒரு மாமனார் கேரக்டர் என்று சொற்பமானவர்களே வசனம் பேசுகின்றனர். ஒரு நாள் ஒரு சீரியல் பார்த்துக்கொண்டிருந்தேன், நடுவில் ஒரு போன்கால் வந்ததால் அதை பேசிவிட்டு சிறுது நேரத்தில் வந்து திரும்பவும் சீரியலை பார்த்தேன், திடீரென்று கதாநாயகி வில்லியிடம் பாசமழை பொழிகிறாள், என்னடா இது குழப்பமாய் இருக்குதென்று அம்மாவிடம் கேட்டால், நான் போன் பேசிய நேரத்தில் பழைய சீரியல் முடிந்து புது சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறதாம். அப்படி ஒரு casting confusion, எல்லாம் அதே முகங்கள். ஒரு நிகழ்ச்சியில் கார்ட்டூனிஸ்ட் மதன் "சேனலை மாத்தி பார்த்தாலும் கதையில ஒரு continuity தெரியுது" என்று கிண்டலடித்தார். உன்மையிலேயே இந்த சீரியல்கள் எல்லாம் நடுத்தர வர்க்கத்தின் பெண்களின் மூளையை மழுங்கடித்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

சரி அப்படியானால் நம் தொலைக்காட்சியில் நல்ல தொடரோ, மெகா சீரியலோ வந்ததே இல்லையா? என்று கேட்டால், நிச்சயமாய் உண்டு. தமிழ் டிவி சீரியலை தொடங்கி வைத்த டிடிக்கே அந்த பெருமை போய்ச்சேரும். அப்போது டிடியில் ஒளிப்பரப்பாகும் தொடருக்கு 13 வாரங்கள் தான் ஒதுக்குவார்கள். அதுவும் அரைமணி நேரமே, ஆக மொத்தம் 6.5 மணி நேரம். அந்த வகையில் நான் பார்த்து ரசித்த முதல் சீரியல், இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தரின் இரயில் ஸ்நேகம். நிழல்கள் ரவி நடித்த சீரியல், அருமையான காதல் கதை. அதே காலகட்டத்தில், ஞாயிறு காலைகளில் பல நல்ல தொடர்கள் இடம்பெறும். சோ நிறைய தொடர்கள் செய்திருக்கிறார். அவர் சினிமாவை sattire செய்த சரஸ்வதியின் செல்வன் என்ற தொடர் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. இவற்றோடு வந்த இன்னும் சில தொடர்கள், சா.கந்தசாமியின் தொலைந்து போனவர்கள், ஜாவர் சீதாராமனின் உடல் பொருள் ஆனந்தி, சுஜாதாவின் கொலையுதிர் காலம், பாலகுமாரனின் தாயுமானவன் என்று பல நல்ல இலக்கிய படைப்பை டிவி தொடராக எடுத்தார்கள். என்னைக்கேட்டால் டிவியில் ஒரு கதையை சொல்ல 13 வாரம் போதுமானதே. டிடிக்கு பிறகு தனியார் தொலைக்காட்சிகள் வந்த ஆரம்பத்திலும், பல நல்ல சீரியல்கள் வந்து கொண்டு தான் இருந்தன. அதற்கு பிள்ளையார் சுழி போட்டவரும் பாலசந்தரே. சன் டிவியில் வந்த கையளவு மனசு ஒரு மேகா சீரியல் தான். ஆனால் அழகான ஒரு கதையை அலுக்காமல் சொல்லியிருப்பார். அதற்கு பிறகு வந்த கொஞ்ச காலத்தை நான் டிவி தொடர்களின் golden time என்பேன். ஏனென்றால் அப்போது தான் மர்மதேசம் வந்தது. மின்பிம்பங்களின் மர்மதேசம் டிவி வரலாற்றிலேயே ஒரு புது அத்தியாயத்தை ஏற்படுத்தியது. டெக்னிக்கலாக டிவியில் பல விஷயங்கள் புதிதாக இருந்தது மர்மதேசத்தில் தான். அதிலும் மர்மதேசம்: விடாது கருப்பு தான் என்னுடைய ·பேவரைட். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னனி இசை, டைரக்ஷன் என்று அசத்தியிருப்பார்கள். அதனுடைய மூன்றாவது பாகம் சொர்ன ரேகை என்று ராஜ் டிவியில் வந்தது, இது மட்டும் 13 வார ·பார்முலாவில் எடுக்கப்பட்டது. சித்தியை இழுத்த..sorry எடுத்த சி.ஜே.பாஸ்கர் தான் இயக்கி இருப்பார். இதுவும் விருவிருப்பாய் இருக்கும். இதன் கதாசிரியர் இந்திரா சவுந்திரராஜன் உன்மையிலே ஒரு மன்டை பார்ட்டி. அமேரிக்காவில் இருந்தாரென்றால் மனோஜ் நைட் ஷ்யாமளனை எல்லாம் எடுத்து சாப்பிட்டு எங்கயோ போயிருப்பார். மர்மதேசத்தின் நாலாவது பாகத்தையும் (பெயர் மறந்துவிட்டது) கொஞ்ச நாள் எடுத்து ஒளிப்பரப்பினார்கள், ஏனோ நடுவில் நின்றுவிட்டது. இதே பாலச்சந்தர் அடுத்து ஜன்னல் என்று ஒரு பல பாககங்கள் கொண்ட மேகா சீரியல் கொடுத்தார். அதுவும் நன்றாகவே இருந்தது. ஒரு பாகத்தில் spbயும் லக்ஷ்மியும் வயதானவரகளாக நடித்திருப்பார்கள். ப்ரேமி என்று ஒரு மெகாவில்தான் கொஞ்சம் சொதப்பியிருப்பார். என்னைக் கேட்டால் டிவி சீரியலுக்கு சாபக்கேடு சித்தியின் ரூபத்தில் தான் வந்தது என்பேன். அதன் பிறகு இருக்கின்ற நிலை தான் நான் முதல் பத்தியில் சொன்னது.

Friday, July 14, 2006

சந்தோஷம் வாழ்க்கையின் வரம்

இரண்டு மாதமாய் வலைப்பதிவு வாசிக்கவும், பதிப்பிக்கவும் நேரமில்லை. காரணம் இந்தியாவிலிருந்து என் பெற்றோர்கள் வந்திருந்தார்கள். இரு மாதமாய் அவர்களுடன் பேசவும், சிரிக்கவும், இந்த ஊரை சுற்று கான்பிக்கவுமே சரியாய் இருந்தது. 'இரண்டு மாதம் போனதே தெரியவில்லை' என்று சொல்வது வழக்கமான clicheவாக இருந்தாலும் அதுதான் உன்மை. என் தாயுடன் இருந்தது அத்தனையும் சொர்க்க நேரங்கள். அவர்களை வழி அனுப்பிய பின் தான் நான் அதை உனர்ந்தேன். விருமாண்டியில் கமல் சொன்னது "சந்தோஷங்கிறது அத அனுபவிக்கும்போது மனுஷனுக்கு தெரியர்தில்ல" எவ்வளவு உன்னத வார்த்தைகள். இன்று தோழி ப்ரியாவின் blogல் happiness is secret of success என்று சொல்லியிருந்தார், அது எவ்வளவு தூரம் உன்மையென்று எனக்கு தெரியவில்லை, ஆனால் சந்தோஷம் தான் வாழ்க்கையின் ரகசியம், இது மட்டும் நிச்சயம்.

Sunday, April 16, 2006

படத்தொகுப்பு - Editing



இன்று lord of the rings: return of the king special extended edition படத்தை என் ரூம்மேட் பார்க்கவேண்டும் என்று சொல்ல ஹாலிவுட் வீடியோ சென்று dvd எடுத்து பார்த்தோம். அதில் the making of the film பார்த்தபோது பீட்டர் ஜாக்சன் சொன்ன ஒரு விஷயம் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இந்த படத்தின் முதல் வெளிப்புற காட்சிகளை எடுக்க நியுசிலாந்து சென்றனர் படக்குழுவினர். அங்கு ஒரு காட்சியையும் எடுக்க முடியாதபடி நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. சரி உட்புற காட்சியை எடுக்கலாமென முடிவு செய்து அவர்கள் எடுத்த முதல் காட்சி return of the kingல் வரும், frodo, smeagol, sam மூவரும் மலையேறும் காட்சி. அது smeagol and sam சன்டைபோட, frodo அவர்களை தடுக்கும் காட்சி, அதிலும் அவர்கள் எடுத்தது sam and frodo சம்பந்தபட்ட காட்சியே. இது நடந்தது 1999ல், பிறகு மழை நின்று மற்ற காட்சிகளை பதிவு செய்து, முதல் இரண்டு பாகங்களை வெளியிட்டு 2003ல் அந்த காட்சியின் மிச்சம் இருந்த smeagol சம்பந்தபட்ட காட்சியை எடுத்தனர். இந்த காட்சியை திரையில் பார்க்கும்போது நமக்கு இதை எடுத்த கால வித்தியாசம் தெரியாதபடி closeup shots வைத்து எடிட் செய்திருப்பார்கள். இது எடிட்டிங் என்னும் நுட்பம் செய்யும் வித்தைக்கு ஒரு எடுத்துக்காட்டு. பல பேருக்கு எடிட்டிங் என்பது என்ன என்று சரியாக தெரியாது. பலசமயம் படம் மிகவும் நீளமாக இருந்தாலோ அல்லது மிகவும் அலுப்பு தட்டினாலும் நாம் எடிட்டரை குறை கூறுவோம். ஒரு படத்தின் நீளத்திற்கோ, தொடர்ச்சிக்கோ எடிட்டர் எந்த வகையிலும் பொறுப்பு கிடையாது. அது இயக்குநரை போய் சேர வேண்டிய பழி. முதன் முதலில் சினிமாவில் எடிட்டிங்கை அறிமுக படுத்தியது ரஷ்யர்கள் தான். ஒரு படத்தில் நீதிமன்ற காட்சி, குற்றவாளிக்கு எதிராக சாட்சி சொல்பவனை கானோம், நீதி மன்றத்தில் எல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள், நேரமாகிக்கொண்டே இருக்கிறது, மக்கள் கவலைகொள்ள ஆரம்பித்தனர், சாட்சி சொல்பவன் அடிப்பட்டு நீதி மன்றத்தை நோக்கி ஓடி வந்துக்கொண்டிருக்கிறான். இந்த காட்சியை எடிட்டிங் வரும்முன்னே நான் சொன்னவற்றையெல்லாம் ஒரு அட்டையில் எழுதி கான்பித்து, பிறகு நீதிமன்றத்தை கான்பித்து காட்சியாக்கி விடுவார்கள். ஆனால் இந்த படத்தில் நீதிமன்றத்தில் நீதிபதி எதிர்தரப்பு வக்கீலை பார்க்க கட், வக்கீல் பின்னே உட்கார்ந்திருக்கும் மக்களை பார்க்க கட், அதில் ஒருவர் கவலையாய் அங்கு மாட்டியிருக்கும் பெரிய கடிகாரத்தை பார்க்க கட், கதிகாரம் பெரிய முள் ஒரு இடம் நகர கட், சாட்சி அடிப்பட்டு ஓடி வந்துக்கொண்டிருக்கிறான் கட், சாட்சி நீதிமன்றத்தில் நுழைகிறான். இது தான் முதன் முதலில் எடிட் செய்து காட்டப்பட்ட காட்சியாகும். இதை செய்தவர்கள்தான் ரஷ்யர்கள். எடிட்டிங்கை இன்னும் புரியும்படி விளக்க வேண்டுமானால்: ஒரு பார்க்கில் இருவர் பேசிக்கொள்வது போல் காட்சி. இதற்கு குறைந்தது மூன்று ஷாட்கள் வைத்து எடுக்க வேண்டும், முதலாமவர் பேசும் காட்சி இரண்டாமவர் பார்வையில் கேமராவை வைத்து எடுக்க வேண்டும், இரண்டாமவர் பேசும் காட்சி முதலாமவர் பார்வையில் கேமராவை வைத்து எடுக்க வேண்டும். வழக்கமாக இதை இன்னொருவர் தோள் பின் கேமராவை வைத்து, கேட்பவரின் தலை பின்னெ சிறுது தெரிவது மாதிரியும், பேசுபவரின் முகம் முழுதும் தெரிவதுமாய் எடுப்பார்கள். பிறகு இருவரும் தெரிவது போல் ஒரு மீடியம் ஷாட் வைப்பார்கள். இதை ஷ¥ட் செய்து எடிட்டரிடம் கொடுப்பார்கள். எடிட்டர் ஒரு சம்பாஷனையில் இந்த மூன்று ஷாட்களையும் சேர்த்து எடிட் செய்து தருவார். இப்படி செய்யாமல் ஒரே மீடியம் ஷாட்டில் இருவரும் பேசுவது போல் கான்பித்தால் நாடகம் பார்ப்பது போல் இருக்கும்.
ஒரு காலத்தில் எடிட்டிங் டேபிளில் படச்சுருளை ஓட்டி அப்படியே கத்தரியை வைத்து எடிட் செய்வார்கள். இப்போது AVID, movie magic என்று பல மென்பொருளை உபயோகிக்கிறார்கள். இதில் படச்சுருளை டிஜிட்டலாக மாற்றி கனினியில் ஏற்றி, எடிட் செய்து திரும்பவும் படச்சுருளாக மாற்றுவார்கள். என் நன்பன் செந்தில் new york film academyல் film making course படித்தான். அவன் செய்த ஒரு ப்ராஜக்ட்டிற்காக எடிட் செய்தது தான் நான் முதன் முதலில் எடிட்டிங் செய்வதை நேரில் பார்த்த அனுபவம். சுமார் ஒரு நிமிடம் ஓட வேண்டிய காட்சியை நாங்கள் மூன்று மணி நேரம் உட்கார்ந்து எடிட் செய்தோம். LOTR: return of the king படம் இரண்டு மில்லியன் அடி படச்சுருள் கொண்டது, முதன் முதலில் நான்கரை மணி நேரம் ஓடும் படமாக எடிட் செய்தனர். பின்னர் அதை மூன்று மணி நேரமாக எடிட் செய்தனர். நான் பார்த்த extended edition இரண்டு டிஸ்க்குகள், நான்கு மணி நேரம் ஓடியது. நம்மூர் படங்களில் சமீபத்தில் வந்த படங்களில் எடிட்டிங் ஹாலிவுட்டிற்கு நிகராக இருக்கிறது. காக்க காக்க, கஜினி போன்ற படங்களில், தமிழ் சினிமாவின் அடுத்த அத்தியாத்திற்கு செல்லும் அறிகுறி தெரிகிறது.

Wednesday, March 29, 2006

தமிழ் சினிமாவின் மைல் கற்கள்

தமிழ் சினிமாவை பின்னோக்கி பார்த்தால், இதுவரை வந்த படங்களில் மைல் கற்களாக நான் மூன்று படங்களை சொல்வேன். இதை மைல் கற்கள் என்று ஏன் சொல்கிறேன் என்றால், இந்த படங்கள் தான் அவற்றுக்கு பின்னால் வந்த தமிழ் சினிமாக்கள் இப்படி தான் எடுக்கப்பட வேண்டும் என்று சில வரைமுறைகள் வகுக்க முன்னோடியாய் இருந்தது.


பராசக்தி: நடிகர் திலகம் அறிமுகமான படம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ரகசியமே. இதற்கு முன் வந்த படங்கள் எல்லாம் பாடல்களால் நிரப்பப்பட்டு, நடிகர்கள் தேமே என்று கேமரா முன் வந்து உணர்ச்சியில்லாமல் நான்கு வரி வசனம் பேசிவிட்டு போவார்கள். உதாரணத்திற்கு ஹரிதாஸ், சாந்தா சக்குபாய் என்று பல படங்கள் சொல்லலாம். பராசக்தி இந்த இலக்கணத்தை உடைத்து, கலைஞரின் அனல் பறக்கும் வசனங்கள், சிவாஜியின் ஒப்பற்ற நடிப்பு என்று ஒரு புதிய பரிமானத்தை கொடுத்தது. இதற்கு பிறகு வந்த படங்கள் எல்லாம் பராசக்தியையே பின்பற்ற தொடங்கின. சிவாஜி அவருக்கு பின் வந்த நடிகர்களுக்கு ஒரு இலக்கனம் வகுத்தார்.



பதினாறு வயதினிலே: ஸ்டுடியோக்குள்ளேயே சுருண்டு கிடந்த தமிழ் சினிமாவை நூறு சதவிகிதம் வெளிப்புற படப்பிடிப்புக்கு இழுத்து வந்த படம். ஹீரோ வில்லன் இமேஜை உடைத்து எல்லா கதாபாத்திரங்களும் இயல்பாக கதையோடு ஒன்றி நடித்த படம். வசனமாக இல்லாமல் காட்சிகளாக சினிமாவில் விஷயங்கள் சொல்லலாம் என்று முதலில் சொன்ன படம். இந்த படத்திற்கு பிறகு தான் கோடம்பாக்கத்திலிருந்து கேமராக்கள் பல வெளியே சென்று, கிராமங்களில் படங்களை எடுத்தது. இயக்குனர் இமயம் பாலச்சந்தரே இந்த படத்தின் பாதிப்பால், கோடம்பாக்கத்திலிருந்தது வெளியே வந்து தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை என நல்ல படங்கள் கொடுத்தார். தமிழ் சினிமாவில் என்பதுகளில் எடுக்கப்பட்ட சினிமாவிற்கு ஒரு முன்னுதாரனமாக இந்த படம் அமைந்தது.


ரோஜா: தொழில்நுட்பத்தால் இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவை இந்தியா முழுதும் திரும்பி பார்க்க வைத்த பெருமை மணிரத்னத்திற்கும் ஏ.ஆர் ரஹ்மானுக்கே சேரும். முக்கியமாக ஒளிப்பதிவு, ஒலிப்பதிவில் இந்த படம் ஒரு மைல்கல்லாய் அமைந்தது. முதன் முதலில் பழைய அலங்கார் தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன், எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கு, 'ஒரு வெள்ளை மழை' பாடலில் அந்த இசையும், ஒளிப்பதிவும் நம்மை காஷ்மீருக்கே அழைத்து செல்லும். தொன்னூறிலிருந்து இன்று வரை எடுக்கப்பட்ட, எடுக்கபடுகிற படங்களுக்கு ரோஜா தான் trendsetter.