Total Pageviews

Monday, February 13, 2006

காதலர் தினம்

காதலர் தினம் என்பதே greeting cards கம்பெனிகளின் கார்ப்பரேட் சதி என்பதில் எனக்கு சில உடன்பாடு உண்டு. இருந்தாலும் அந்த ஒரு நாளில் காதலுக்காகவே வாழ்ந்த, காதலுக்கு மரியாதை தந்த பலரை நினைத்து பார்த்து வாழ்த்துவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். இன்று நான் எனக்கு தெரிந்து, காதலித்து கரம் பிடித்த நன்பர்களுக்கும், அந்த பகுதியை எட்ட இருக்கும் நன்பர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்களை அனுப்பினேன். காதலர் தின ஷ்பெஷலில் விகடனில் வந்த பார்வையற்ற தம்பதியினரின் கதை என்னை கலங்க வைத்தது. செல்வனின் காதலர் தின பதிப்பும் என்னை கவர்ந்தது.

சொல்ல மறந்த கவிதை - என் டைரியிலிருந்து.
நான் காதல் உணர்ந்த தருனம்...
என் வானம் விரிந்தன
உலகம் சுருங்கின
இரவுகள் நீண்டன
கவிதைகள் பிறந்தன
இதயம் பட்டாம்பூச்சி ஆனது
இது சுரப்பிகளின் சதி - என
சொன்னது விஞ்ஞானம்
அது உன்மையென்றால் - என்
அவயங்கள் உறங்கும் போது
கனவுகள் காதல் செய்தது ஏன்

பொக்கிஷமாய் இருக்கும்
கல்லூரி ஆட்டோகிரா·ப்
விழிகள் உன் பக்கம் தேடின
'நல் வாழ்க்கைக்கு வாழ்த்துகிறேன்'
நிரப்பாத நான்கு வரிகள் தள்ளி உன் கையெழுத்து
இடையில் நீ எழுத மறந்ததென்ன

சொல்லாமல் இருந்தால்
இதயம் சுடுகாடாகிவிடும் என்று
சொன்னேன் ஒரு நாள் பார்த்து
பதில் சொல்லாமலே
என் காதலை கல்லறையாக்கி
ஒற்றை ரோஜாவை வைத்தாய்

காதல் தெய்வீகமானது என்றால்
என் ஞாபகங்கள் வேண்டுதல் வடிவம் பெற்றதா..
இல்வாழ்வெல்லாம் நல்வாழ்க்கை வாழ்கிறாய்
எனக் கேட்டதும் ஒரு சந்தோஷ பெருமூச்சு

நான் காதலை நினைக்கும் தருனம்
மறந்து போக நினைத்தாலும்
கடந்து போன மைல் கல்லாய் உன் ஞாபகங்கள்...

Monday, February 06, 2006

டிஷ்யூம்

சும்மா பொழுது போகட்டுமே என்று தான் இந்த படத்தை பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் படம் முடிய அசந்து விட்டேன். தமிழில் இப்படி ஒரு sensible காதல் கதையை பார்த்ததில்லை. வித்தியாசமான திரைக்கதை, வசனம் மற்றும் காட்சியமைப்பிலும் படத்தை நிறையச்செய்த சசிக்கு பாராட்டுகள். திரையில் ஹீரோவுக்கு டூப் போடும் ஸ்டண்ட்மேனாக வரும் ஹீரோ, ஆர்ட்ஸ் காலேஜ் படிக்கும் ரசனைமிக்க ஒரு ஹீரோயின், இப்படி இரு கதாபாத்திரம், இருவருக்கும் காதல் என்று typical தமிழ் பட இயக்குநர் படத்தை எடுத்திருந்தால், தனக்கு பொருந்தவே பொருந்தாத ஹீரோவுடன், ஹீரோயினுக்கு கண்டதும் காதல், ஹீரோயின் அப்பாவிடம் நாம் பார்த்து புளித்துபோன ஏழை பனக்கார காதல் டயலாக்குகள், நாலு பைட் கடைசியில் சுபம் என மசாலா தூவி கைமா பன்னியிருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட cliche எதுவும் இல்லாமல், காட்சிக்கு காட்சி வித்தியாசமாய் படத்தை கொண்டு சென்றிருக்கும் விதம் சூப்பர்...
'ரிஸ்க்' பாஸ்கராக ஜீவா, ராம் படத்திற்கும் இதற்கும் பயங்கர இம்ப்ரூவ்மெண்ட். லாக்கப்பில் போலீசார் அடிப்பதற்கு முன்பே அடிவாங்கியது போல் ரியாக்ஷன் கொடுத்து விழ, ரகளயான ஓப்பனிங். லோக்கலாக பேசும் பேச்சு, பான்பராக் போடும் ஸ்டண்ட்மேனாக பாடி லாங்க்வேஜ் என்று நடிப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார். இமேஜ் வளர்க்கிறேன் பேர்விழி என்று பஞ்ச் டயலாக், அதீத ஹீரோயிஸம் என்று சிக்காமல் இப்படியே நாலு படம் நடித்தால் சூர்யா பாதையில் செல்லலாம்.
ஹீரோவின் ரசனையும், ஹீரோயின் ரசனையும் எப்படி ஒட்டாமல் இருக்கிறது என்று சொல்லுகிற காட்சியமைப்பு எல்லாம் பன்ச். சந்தியா பீச்சில் செய்த மணல் சிலையை பேசிக்கொண்டே அதன் அருமை புரியாமல் ஜீவா காலால் உதைப்பதும், மோனாலிசா படத்தை பார்த்து "இது உங்க பெரியம்மாவா" என்று கேட்பதும் சில உதாரணங்கள்.
வசனங்களும் ஆங்காங்கே நச். டைட் டி சர்ட், கழுத்தில் தொங்கும் கத்தி செயின்கள் என்று வரும் ஜீவாவை பார்த்து, சந்தியா "கொஞ்சம் டீசண்டா வரலாமே" என்று கேட்க "நாங்க வில்லனா தெரியற வரைக்கும் தான் எங்களுக்கு பொழைப்பு" என்று ஜீவா சொல்வது ஒரு உதாரணம்.
ஒவ்வொரு காட்சியையும் நாம் சினிமா பானியில் ஒரு மாதிரியாக ஊகிக்க ஆனால் ப்ராக்டிக்லாக அதை எடுத்திருப்பது தான் இந்த படத்தின் பெரிய ப்ளஸ். பஸ் ஸ்டாப்பில் பஸ் வராமல் சந்தியா காத்திருக்க, அங்கே வரும் ஜீவா ஒரு பஸ்ஸை நிறுத்துவதற்கு அதன் முன்னால் போய் பாய, இதை பார்த்து ஹீரோயினுக்கு காதல் வரும் என்று பார்த்தால், அவர் போய் ஜீவாவை அறைகிறார் "உன் ரிஸ்க்க எல்லாம் சினிமாவுல்ல வச்சிக்கோ", சரி பதிலுக்கு ஹீரோ அப்படியே போய் ஒரு சோக பாட்டு பாடுவார் என்று பார்த்தால் பதிலுக்கு ஜீவாவும் சந்தியாவை பளார் என்று ஒரு அறை "உன்ன இம்ப்ரெஸ் பன்ன எனக்கு இதுதான் தெரியும், மத்தவங்க மாதிரி இங்கிலிஷ் பேசி வாயில மவுத் ஆர்கன் வாசிக்க தெரியாது" என்று பொரிந்து தள்ள, என ஆங்காங்கே சர்ப்ரைஸ். characterisation திரைக்கதைக்கு நல்ல வலு சேர்க்கிறது.
காமெடிக்கு விவேக் வடிவேலுவிடம் எல்லாம் போகாமல், ஒரு குள்ளரை வைத்து காமெடி செய்திருப்பது புதுமை. என்னதான் குள்ளராக இருந்தாலும் அவரின் குள்ளத்தனத்தை வைத்து ஓவராக காமெடி செய்திருக்கிறார்கள் என்று நினைத்தால், கடைசியில் அவர் கடன் வாங்கும் காரணத்தை சொல்லி நம்மை கலங்க வைக்கின்றனர். படத்தின் ஒரே குறை வலுக்கட்டாயமாக தினிக்கப்பட்ட பாடல்கள் தான், ஆனால் அதிலும் இரண்டு மூன்று பாடல் மாண்டேஜ் ஷாட்டுகளாக கதையை நகர்த்துவதால் போரடிக்கவில்லை. மொத்தத்தில் டிஷ்யூம், ஒரு யதார்த்தமான 'காதல்' படம் போல் இது நடைமுறை காதல் கதை.

Sunday, February 05, 2006

வரலாறு - I

பள்ளியில் படிக்கும் காலத்தில் எனக்கு வரலாறு பாடத்தின் மேல் அவ்வளவு ஈடுபாடு இல்லை. 'கடந்த காலத்தை தெரிவதனால் என்ன பயன்' என்று பலமுறை நான் கேட்டதுண்டு. ஆனால் இப்போதெல்லாம் எனக்கு வரலாறு மேல் ஓர் ஆர்வம் ஏற்படுகிறது. முதலில் பள்ளி பருவத்தில் எனக்கு வரலாறு மேல் ஆர்வம் ஏற்படாதற்கு காரணம், நாம் படித்த எல்லா வரலாறு பாடங்களும் வரலாற்றின் பல சம்பவங்களின் தலைப்புச் செய்திகளின் கோர்வையாய் இருந்தது ஒரு காரணம். They merely give the highlights and statistics of a historical incident, மாறாக ஒரு சம்பவம் ஒரு நாட்டிலோ அல்லது சமுதாயத்திலோ எத்தகைய மாற்றத்தை உண்டு பன்னியது என்பதை நாம் படித்த வரலாறு சொல்லியதில்லை and not the importance and impacts of that history. உதாரணத்திற்கு ஒரு ப்ரெஞ்சு புரட்சியோ அல்லது ரஷ்ய புரட்சியோ எவ்வளவு பிரசத்தி பெற்றது, அந்த நாடுகளில் அந்த புரட்சிகள் எத்தகைய மாற்றத்தை உண்டு பன்னியது என்பதை நாம் படிக்கவில்லை, மாறாக ப்ரெஞ்சு புரட்சி ஏற்பட்ட வருடம், அந்த வருடத்தில் எந்த லூயி மன்னன் ஆண்டான் என்பது மட்டும் தான் படித்தோம். இந்திய சுதந்திர வரலாறும் அவ்வாறே. காந்தியடிகள் இந்த இந்த வருடத்தில் இந்த போராட்டங்களை துவங்கி வைத்தார், இந்த வருடத்தில் கைதானார், பிறகு மவுண்ட்பேட்டன் வந்தார் சுதந்திரம் கொடுத்தார்...இப்படித்தான் நாம் சுதந்திரம் வாங்கிய வரலாறையே படித்தோம். சிறுவயதில் நிறைய நாள் நான் இப்படித்தான் யோசித்திருக்கிறேன் "மவுண்ட்பேட்டன் வலிய வந்து கொடுத்த சுதந்திரத்தை நாம் ஏன் காந்தியடிகள் போராடி வாங்கி கொடுத்தார் என்று சொல்லுகிறோம்". காந்தியை பற்றி நான் ரிச்சர்ட் அட்டென்பொரோவின் காந்தி படம் பார்த்து தான் நிறைய தெரிந்து கொண்டேன். ஒரு மனிதராக காந்தி எத்தகையவர், எவ்வளவு தியாகங்களை செய்தார் அவரின் கொள்கைகள் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை இன்னும் உள்ளே சென்று விஸ்தாரமாக சொல்லியிருந்தார்களென்றால் நான் நம் மகாத்மாவை பற்றி பள்ளியிலே ஆழ்ந்த அறிவை பெற்றிருப்பேன். நம் பாடத்திட்டங்கள் ஒரு மணி நேரம் எழுதும் தேர்வை வைத்து வரையறுக்கப்படுவதால் வரும் நிலை இது. நல்லவேளை நாம் பள்ளியில் மாறுவேட போட்டியிலும், திரைப்படங்களிலும் கட்டபொம்மனையும், பாரதியையும் பார்த்ததினால், விடுதலை போராட்டத்தில் தமிழனின் பங்கை பற்றி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்கிறோம். நம் ஊரில் பெற்றோர்களும், குழந்தைகளுக்கு பாடங்களுக்கு அப்பாற்பட்ட வரலாற்று அறிவை பெருக்குவதற்கு அவ்வளவு ஊக்கம் கொடுப்பதில்லை. நான் வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான், ஆனால் வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை தான் அருங்காட்சியத்திற்கு சென்றிருக்கிறேன். அப்போதும், என் அம்மா அங்கிருந்த ஆயிரம் ஆண்டு முன் எடுத்த ஒரு மீனின் எலும்புகளை ஆச்சர்யமாக காட்டிய அளவுக்கு, நான் அங்கிருந்த பல வரலாற்று சின்னங்களின் பற்றிய தகவலை படிக்க விடவில்லை. இன்னொரு சம்பவம் ஒருமுறை ஊட்டிக்கு சுற்றுலா போய் அங்கிருந்து திருப்பூருக்கு என் தந்தையின் நன்பரை பார்க்க சென்றோம். என்னிடம் திருப்பூரில் என்ன பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள், எனக்கு பாடத்தில் படித்த கொடி காத்த குமரனின் ஞாபகம் வந்தது, அவர் வாழ்ந்த வீட்டிற்கு போக வேண்டும் என்று சொன்னேன். ஆனால் அவர்களோ அங்கிருந்து பழனிக்கும், பனியன் பேக்டரிக்கும் முன்னுரிமை கொடுத்து, திரும்பி சென்னைக்கு ரயிலேறும் முன் வழியில் ஒரு வீட்டை தூரத்தில் காட்டி "அதுதாம்ப்பா கொடி காத்த குமரன் வீடு...பாத்துக்கோ" என்று சொல்லி ரயிலேற்றினர்.
ஏன் நாம் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?...வரலாறு நாம் கடந்து வந்த பாதை மட்டும் இல்லை, இனிமேல் நாம் கடக்க வேண்டிய பாதையையும் தீர்மானிக்கிறது. உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் இந்தியை ஏன் நமக்கு கற்றுக்கொடுக்கப்படவில்லை என்பதை அறிவதற்கு நாம் திராவிட கழகங்களின் வரலாற்றை படித்தாக வேண்டும். அந்த வரலாறு தான் இன்றும் இந்தி நம் ஊரில் எட்டிப்பார்க்காதவாறு தடுக்கிறது. நம் வரலாறு பாடங்களில் இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம், உலக வரலாறு சுத்தமாக புறக்கனிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போர்தான் இருபதாம் நூற்றாண்டில் உலகத்தின் தலையெழுத்தையே மாற்றியது, ஆனால் ஜெர்மனியனோ, ஜப்பான்காரனோ இந்தியாவில் குண்டு போடவில்லை என்பதால் நமக்கு அதைப்பற்றி சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் உன்மை என்னவென்றால், இரண்டாம் உலகப்போரிலும், முதல் உலகப்போரிலும் ஆங்கிலேயப் படையில் பனியாற்றி உயிரைவிட்ட இந்தியர்கள் பல லட்சம் பேர். ஆங்கிலேயப் படையில் பனியாற்றிய ஒரே காரணத்தினால் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் அவர்களின் தியாகங்களை பதியவைக்க மறந்துவிட்டனர். இன்றும் சென்னையில் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கு நினைவிடம் இருக்கிறது அதை வருடா வருடம் பிரிட்டன் அரசு அதன் சொந்த செலவில் பராமரிக்கிறது.
(தொடரும்..)