இந்த முறை அம்மா அப்பா என்கூட தங்கி இருக்க, அவர்களுக்கு போரடிக்காமல் இருக்க சன் டிவியையும், கே டிவியையும் இரண்டு மாதத்திற்கு இனையத்தில் subscribe செய்தேன். தமிழ் டிவியில் வரும் மெகாத் தொடர்களின் கொடுமைகளை பல வலைப்பூக்களில் படித்தாலும், அதன் தாக்கத்தை இந்த இரண்டு மாதங்களில்தான் நேரே கண்டேன். சொல்லி வைத்தாற்போல் எல்லா தொடர்களிலும் ஒரே கதை தான், இரண்டு பிரதான பெண் பாத்திரங்கள், ஒருத்தி குடும்பத்துக்காக போராடும், எப்போதுமே லிட்டர் கணக்காக அழுது வடிக்கும் ஹீரோயின், இன்னொருத்தி இவளின் அத்தனை முயற்சியையும் முறியடிப்பதற்காகவே பிறந்த மாமியாரோ, நாத்தனாரோ யாரோ ஒரு இன்னொரு பெண். இவர்களை சுற்றியே நகரும் கதை. இந்த சீரியல்களில் எல்லாம் ஆண்கள் பெரும்பாலும் atmosphere ஆர்ட்டிஸ்டுகளாகவே வந்து போவார்கள். மனைவியை சுற்றி கதை நகர்ந்தால் ஒரு புருஷன் கேரக்டர், ஒரு அப்பா கேரக்டர் (முக்கால்வாசி ஹீரோயினுக்கு அப்பா கிடையாது, விதவை அம்மா ஒரு கூடுதல் சென்டிமென்ட்), ஒரு மாமனார் கேரக்டர் என்று சொற்பமானவர்களே வசனம் பேசுகின்றனர். ஒரு நாள் ஒரு சீரியல் பார்த்துக்கொண்டிருந்தேன், நடுவில் ஒரு போன்கால் வந்ததால் அதை பேசிவிட்டு சிறுது நேரத்தில் வந்து திரும்பவும் சீரியலை பார்த்தேன், திடீரென்று கதாநாயகி வில்லியிடம் பாசமழை பொழிகிறாள், என்னடா இது குழப்பமாய் இருக்குதென்று அம்மாவிடம் கேட்டால், நான் போன் பேசிய நேரத்தில் பழைய சீரியல் முடிந்து புது சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறதாம். அப்படி ஒரு casting confusion, எல்லாம் அதே முகங்கள். ஒரு நிகழ்ச்சியில் கார்ட்டூனிஸ்ட் மதன் "சேனலை மாத்தி பார்த்தாலும் கதையில ஒரு continuity தெரியுது" என்று கிண்டலடித்தார். உன்மையிலேயே இந்த சீரியல்கள் எல்லாம் நடுத்தர வர்க்கத்தின் பெண்களின் மூளையை மழுங்கடித்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.
சரி அப்படியானால் நம் தொலைக்காட்சியில் நல்ல தொடரோ, மெகா சீரியலோ வந்ததே இல்லையா? என்று கேட்டால், நிச்சயமாய் உண்டு. தமிழ் டிவி சீரியலை தொடங்கி வைத்த டிடிக்கே அந்த பெருமை போய்ச்சேரும். அப்போது டிடியில் ஒளிப்பரப்பாகும் தொடருக்கு 13 வாரங்கள் தான் ஒதுக்குவார்கள். அதுவும் அரைமணி நேரமே, ஆக மொத்தம் 6.5 மணி நேரம். அந்த வகையில் நான் பார்த்து ரசித்த முதல் சீரியல், இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தரின் இரயில் ஸ்நேகம். நிழல்கள் ரவி நடித்த சீரியல், அருமையான காதல் கதை. அதே காலகட்டத்தில், ஞாயிறு காலைகளில் பல நல்ல தொடர்கள் இடம்பெறும். சோ நிறைய தொடர்கள் செய்திருக்கிறார். அவர் சினிமாவை sattire செய்த சரஸ்வதியின் செல்வன் என்ற தொடர் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. இவற்றோடு வந்த இன்னும் சில தொடர்கள், சா.கந்தசாமியின் தொலைந்து போனவர்கள், ஜாவர் சீதாராமனின் உடல் பொருள் ஆனந்தி, சுஜாதாவின் கொலையுதிர் காலம், பாலகுமாரனின் தாயுமானவன் என்று பல நல்ல இலக்கிய படைப்பை டிவி தொடராக எடுத்தார்கள். என்னைக்கேட்டால் டிவியில் ஒரு கதையை சொல்ல 13 வாரம் போதுமானதே. டிடிக்கு பிறகு தனியார் தொலைக்காட்சிகள் வந்த ஆரம்பத்திலும், பல நல்ல சீரியல்கள் வந்து கொண்டு தான் இருந்தன. அதற்கு பிள்ளையார் சுழி போட்டவரும் பாலசந்தரே. சன் டிவியில் வந்த கையளவு மனசு ஒரு மேகா சீரியல் தான். ஆனால் அழகான ஒரு கதையை அலுக்காமல் சொல்லியிருப்பார். அதற்கு பிறகு வந்த கொஞ்ச காலத்தை நான் டிவி தொடர்களின் golden time என்பேன். ஏனென்றால் அப்போது தான் மர்மதேசம் வந்தது. மின்பிம்பங்களின் மர்மதேசம் டிவி வரலாற்றிலேயே ஒரு புது அத்தியாயத்தை ஏற்படுத்தியது. டெக்னிக்கலாக டிவியில் பல விஷயங்கள் புதிதாக இருந்தது மர்மதேசத்தில் தான். அதிலும் மர்மதேசம்: விடாது கருப்பு தான் என்னுடைய ·பேவரைட். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னனி இசை, டைரக்ஷன் என்று அசத்தியிருப்பார்கள். அதனுடைய மூன்றாவது பாகம் சொர்ன ரேகை என்று ராஜ் டிவியில் வந்தது, இது மட்டும் 13 வார ·பார்முலாவில் எடுக்கப்பட்டது. சித்தியை இழுத்த..sorry எடுத்த சி.ஜே.பாஸ்கர் தான் இயக்கி இருப்பார். இதுவும் விருவிருப்பாய் இருக்கும். இதன் கதாசிரியர் இந்திரா சவுந்திரராஜன் உன்மையிலே ஒரு மன்டை பார்ட்டி. அமேரிக்காவில் இருந்தாரென்றால் மனோஜ் நைட் ஷ்யாமளனை எல்லாம் எடுத்து சாப்பிட்டு எங்கயோ போயிருப்பார். மர்மதேசத்தின் நாலாவது பாகத்தையும் (பெயர் மறந்துவிட்டது) கொஞ்ச நாள் எடுத்து ஒளிப்பரப்பினார்கள், ஏனோ நடுவில் நின்றுவிட்டது. இதே பாலச்சந்தர் அடுத்து ஜன்னல் என்று ஒரு பல பாககங்கள் கொண்ட மேகா சீரியல் கொடுத்தார். அதுவும் நன்றாகவே இருந்தது. ஒரு பாகத்தில் spbயும் லக்ஷ்மியும் வயதானவரகளாக நடித்திருப்பார்கள். ப்ரேமி என்று ஒரு மெகாவில்தான் கொஞ்சம் சொதப்பியிருப்பார். என்னைக் கேட்டால் டிவி சீரியலுக்கு சாபக்கேடு சித்தியின் ரூபத்தில் தான் வந்தது என்பேன். அதன் பிறகு இருக்கின்ற நிலை தான் நான் முதல் பத்தியில் சொன்னது.
3 comments:
ஏங்க கொஞ்சம் பத்தி பிரிச்சு எழுதியிருக்கலாமே.
நல்லகாலம். நான் இந்த சீரியல் கொடுமை இல்லாத ஊரில் இருக்கேன்.
ஆங்கில சீரியல்கள் வரும். ஆனா டிவி பார்க்கறதில்லையாக்கும்.
thanks gopal..ippa pathi pirichiten
என்னங்க நீங்க, இப்படி ரெண்டா வெட்டிட்டாப் பிரிச்சதா அர்த்தமா? :-))))
கொஞ்சம் சின்னப்பத்திகளா இருந்தா கண்ணு சோர்வடையாதுங்க. அதுதான் விஷயம்:-))
மாடரேஷன் இருக்குல்லே. அப்ப இன்னும் எதுக்குங்க இந்த வேர்டு வெரிஃபிகேஷன்.
இது பின்னூட்டம்போட வரும்போது இருக்கும் ஒரு தடைக்கல்.
Post a Comment